

சமையல் எரிவாயு கேஸ் சிலின்டருக்கான மானியத்தை பெற ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மக்கள் விரோத செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சமையல் எரிவாயு கேஸ் மானிய விலையில் பெறுபவர்கள் அனைவரும் செப்டம்பர் 30-க்குள் தங்களது ஆதார் எண்ணை வங்கியில் அல்லது எரிவாயு விநியோகிக்கும் நிறுவனத்திடம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யவில்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் எரிவாயு கேஸ் சிலின்டருக்கான மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அதிர்ச்சியளிக்கும் முடிவு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மத்திய பாஜக அரசு தொடுத்துள்ள கொடுந்தாக்குதலாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு ஆதார் எண் அவசியமில்லை என்றும், ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டுமென்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் 2016, ஜூலை 1 முதல் எரிவாயு சிலின்டர் வாங்கிய அனைவருக்கும் ஆதார் எண் பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லி மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.
2016, செப்டம்பர் 30-க்குள் ஆதார் எண் பதிவு செய்யப்படாவிட்டால் அக்டோபர் 1 முதல் மானியம் ரத்து செய்யப்படும் என்று குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது. மத்திய அரசு மற்றும் எண்ணை நிறுவனங்களின் மேற்கண்ட நடைமுறை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். நாட்டின் தலைமை நீதிமன்ற உத்தரவை மீறுகிற எதேச்சதிகார, அதிகாரவர்க்க போக்காகும். ஜனநாயகத்தை துச்சமென மதிக்கும் மக்கள் விரோத செயலாகும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.