

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த இளைஞரை சுட்டுக்கொன்ற எஸ்.ஐ. நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடந்துவரும் நிலையில், இதை கொலை வழக்காக மாற்றி எஸ்.ஐ.யை கைது செய்ய வேண்டும் என உறவினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த சையது முகம்மது(24) மற்றும் மெக்கானிக் அருள்தாஸ் என்பவருக்கும் செவ்வாய்க்கிழமை கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர் பாக அருள்தாஸ் அளித்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட சையது முகம்மது விடம் விசாரணை மேற்கொண்ட எஸ்.ஐ. காளிதாஸ், அப்போது சையது முகம்மது கத்தியால் குத்த வந்ததாகக் கூறி அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். சம்பவத்தைக் கண்டித்து நேற்றும் உறவினர்கள், பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற் கிடையே எஸ்.ஐ. காளிதாஸை சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் எஸ்.பி. மயில் வாகனன் உத்தர விட்டார். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்தபோது பணியிலிருந்த காவலர் ஐயப்பனிடம் புகார் பெற்று போலீஸ் சட்டப்பிரிவு 176-ன் கீழ் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை சையது முகம்மதுவின் உடல் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.
எஸ்.ஐ. மீது கொலை வழக்கு பதிவு செய்ததால்தான் உடலை வாங்குவோம் என உறவினர்கள் கூறினர். அவர்களிடம் போலீஸார் சமரசம் பேசிவருகின்றனர்.
ஜவாஹிருல்லா கருத்து
ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹி ருல்லா கூறும்போது, எஸ்.ஐ. காளிதாஸை நிரந்தரப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சையது முகம்மது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என காவல்துறை அதிகாரி களிடம் பேசியுள்ளேன். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளனர் என்றார்.
அப்துல் ரஹீம் புகார்
இந்திய தேசிய லீக்கின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் மற்றும் கட்சியினர் சென்னையில் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யை சந்தித்து புகார் மனுவினை அளித்தனர்.
உயர்நீதிமன்றத்தில் மனு
சையது முகம்மதுவை துப்பாக்கி யால் சுட்ட எஸ்.ஐ. மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உயிர் இழந்த இளைஞரின் உறவினரான முகம்மது அலியார் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.