

போதிய நிதி வசதி இல்லாததாலும், வேறு பல காரணங்களாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் போதிய அளவுக்கு நிதி வசதி இல்லாததாலும், சில காரணங்களாலும், வெற்றி வாய்ப்பு குறைந்தது. கடந்த தேர்தலின்போது 3 பேர் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் அது 8 ஆக உயர்ந்துள்ளதன் மூலம் காங்கிரஸின் செல்வாக்கு உயர்ந்துள்ளதை அறியலாம்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுதல் மற்றும் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண தனி அமைச்சகத்தை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி தேர்தலின் போது கூறினார். ஆனால் இந்த வாக் குறுதி இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. இது தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. கச்சத்தீவை முதல் அமைச்சர் ஜெயலலிதா மீட்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். இந்த நம்பிக்கை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், அது நடப்பது சந்தேகம். சிறிய, பெரிய விவசாயிகள் என்று பாகுபாடு பார்க்காமல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தமி ழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.