

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
அன்னை தெரசாவுக்கு ரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் வழங்கப்படுவது வரவேற்கத் தக்கது. மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 6 உயர் நீதிமன்றங் களுக்கு தலைமை நீதிபதிகளே இல்லை. 24 உயர் நீதிமன்றங்களில் 478 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், சுமார் 39 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன என்று தெரிய வந்துள்ளது. இப்படி இருந்தால் நீதி எப்படி வேகமாகக் கிடைக்கும்.
‘தி இந்து’ நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள நவீன நீர்வழிச் சாலைப் பேரியக்கத்தின் தலைவர் பொறியாளர் காமராஜ், ‘கடலில் வீணாகக் கலக்கும் நீரை பயனுள்ள வகையில் சேமிக்க நீர்வழிச் சாலை திட்டம் தேவை. இதற்கு மாநில அரசு ரூ.500 கோடி செலவிட்டால், நீர்வழிப் போக்குவரத்து, நீர் மின் நிலையம் போன்றவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும். இது தொடர்பாக தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித் திருந்தது. ஆனால், ஏனோ அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டுகிறது’ என்று கூறியுள்ளார்.
இதனை தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மாநிலத்துக்குள் பாயும் நதிகளை இணைக்கும் எண்ணத்தில் திருச்சி அருகே காவிரி கட்டளை கதவணைத் திட்டம், தாமிரபரணி கருமேணி ஆறு நம்பியாறு இணைப்புத் திட்டம், பெண்ணை ஆற்றுடன் செய்யாற்றை இணைக் கும் திட்டம் ஆகிய திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. ஆனால், அவை என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்நிலை யில் ஏ.சி.காமராஜின் ஆலோசனை களை தமிழக அரசு ஏற்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், ஆக் கப்பூர்வமான திட்டங்கள் என்றாலே அதிமுகவுக்கு அலர்ஜி ஆகும்.
சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை தொடங்குவதற்காக கையகப்படுத்தப்பட்ட இடங்களில் அதற்கான பணிகள் தொடங்கப் படாததால், நிலங்களை விவசாயி களிடமே ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக 20 ஆண்டுகளுக்கு முன்னர் 8 ஆயிரத்து 300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. எனவே, அந்த நிலங்கள் விவசாயிகளுக்கே திரும்பக் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு கல்யாணி மதிவாணன் எந்த அடிப்படையில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், விளக்கம் ஏற்புடையதாக இல்லையென்றால், தாமாக வழக்கை எடுத்து விசாரிக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த 6 மாதமாக காலியாக இருந்த குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அவசர அவசர மாக கல்யாணி மதிவாணன் தலைவராக்கப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவரை அதிமுக அரசு நியமித்த பிறகு, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில்தான் அவருக்கு இந்த பொறுப்பு தரப்பட்டு, அது நீதிமன்றம் விளக்கம் கேட்கும் அளவுக்கு சென்றுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, மக்களால் நான், மக்களுக்காக நான் என்று சொல்கிறார். ஆனால், மக்களை சந்திப்பதும் இல்லை, குறைகள் கேட்ப தும் இல்லை. ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களான மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், சகிப்புத் தன்மை ஆகியவை இந்த ஆட்சியினரால் அலட்சியம் செய்யப்படுகின்றன.