

மாசிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாற்றுத் திறன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக மாணவர்களின் பெற்றோர்கள் சேலம் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் ஒன்று முதல் 8-ம் வகுப்புகளில் பயின்று வருகின்றனர். அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோரும் அவர்களின் பெற்றோரும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார்மனு அளித்தனர். மனுகுறித்து மாணவர்களின் பெற்றோர் பாலமுருகன், மோகன்ராஜ் ஆகியோர் கூறியதாவது:
மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேலம், அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி, வலசையூர் ஆகிய சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த குழந்தைகள் 50-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வகுப்பெடுக்க சிறப்பு ஆசிரியர்களாக இரு ஆசிரியர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மாறுதலாகி சென்றுவிட்டார்.
தற்போது ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். இவரும் அலுவலக பணிக்காக அடிக்கடி வெளியில் சென்று விடுகிறார். இதனால் வாரத்துக்கு ஓரிரு நாள் மட்டுமே அவரால் வகுப்புக்கு வர முடிகிறது. மாற்றுத் திறனாளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கும் நிலையில் ஒரு ஆசிரியர் மட்டுமே வாரத்துக்கு ஓரிரு நாள் பாடம் நடத்துவதால் எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய காது கேட்கும் கருவி, ஊன்றுகோல், பாட புத்தகங்கள் உள்ளிட்டவையும் முறையாக வழங்கப்படுவதில்லை. இப்பிரச்சினைக்கு ஆட்சியர் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.