Published : 24 Jun 2016 07:53 AM
Last Updated : 24 Jun 2016 07:53 AM

மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்குவிக்க அப்துல் கலாம் பெயரில் புதிய திட்டம்: சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தொடக்கம்

பொறியியல் மாணவர்களிடம் ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்குவிக் கும் வகையில் அப்துல் கலாம் பெயரில் புதிய திட்டத்தையும், லியோ முத்து பெயரில் புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தையும் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக சாய்ராம் கல்விக் குழுமங்களின் தலைமைச் செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து நிருபர்களிடம் கூறியதாவது:

பொறியியல் மாணவர் களிடையே ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் டாக்டர் அப்துல் கலாம் இன்னோவேஷன் எக்கோ சிஸ்டம் என்ற புதிய ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கு கிறோம். இதில், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து பொறியியல் மாணவர்களும் சேரலாம். இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் விவசாயம், எரிசக்தி, நீர் மற்றும் சுற்றுச்சூழல், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு ஆகிய 5 தலைப்புகளில் தங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படும் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் வழங்கப்படும்.

பொறியியல் கலந்தாய்வு மூலம் சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியை தேர்வு செய்யும் மாணவர்கள் கணிதம், இயற்பியல் வேதியியல் ஆகிய 3 பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றால் ரூ.1 லட்சமும், ஏதேனும் 2 பாடங்களில் 100-க்கு 100 எடுத்தால் ரூ.50 ஆயிரமும், ஒரு பாடத்தில் பெற்றால் ரூ.25 ஆயிரமும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். மூன்று பாடங்களிலும் சேர்த்து 580 மற்றும் அதற்கு மேல் பெற்றால் ரூ.10 ஆயிரமும், 570 முதல் 579 வரை எடுத்திருந்தால் ரூ.5 ஆயிரமும் அளிக்கப்படும். சிபிஎஸ்இ மாணவர்களைப் பொறுத்தவரையில், மேற்கண்ட 3 பாடங்களில் 290 மற்றும் அதற்கு மேல் எடுத்தால் ரூ.50 ஆயிரமும், 285 முதல் 289 வரை பெற்றால் ரூ.25 ஆயிரமும், 275 முதல் 284 வரை ரூ.10 ஆயிரமும் உதவித்தொகையாக பெறலாம்.

இவ்வாறு சாய் பிரகாஷ் லியோ முத்து கூறினார்.

இதைத் தொடர்ந்து, டாக்டர் அப்துல் கலாம் இன்னோவேஷன் எக்கோ சிஸ்டம் ஆராய்ச்சி திட்டத்தையும், லியோ முத்து கல்வி உதவித்தொகை திட்டத்தையும் விஞ்ஞானி பொன்ராஜ் தொடங்கி வைத்தார். முன்னதாக, சாய்ராம் கல்லூரி முதல்வர் விஜயகுமார் கல்லூரியின் செயல்பாடுகளை யும், சாதனைகளையும் எடுத்துரைத்தார். நாசாவுக்கு சென்று வந்த சாய்ராம் கல்லூரி மாணவி காவ்யாவின் திறமைகளைப் பாராட்டி அவருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பிறகு பொறியியல் படிப்பு குறித்து விஞ்ஞானி பொன்ராஜ் நிருபர்களிடம் கூறும்போது, “தற்போது பொறியியல் படிப்பு மீது மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது. பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பதே இதற்குக் காரணம். 540 பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ இரண்டரை லட்சம் இடங்கள் இருந்தாலும் ஒன்றரை லட்சம் இடங்களே நிரம்புகின்றன. சமூகத்துக்கு பயன் அளிக்கக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பதன் மூலம் பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x