Last Updated : 06 Jul, 2016 11:08 AM

 

Published : 06 Jul 2016 11:08 AM
Last Updated : 06 Jul 2016 11:08 AM

பூட்டும் போராட்டமும்: பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை சர்ச்சை

பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரிக்கை

பட்டினப்பாக்கத்தில் 4 கொலை மற்றும் ஒரு பாலியல் பலாத்காரம் சம்பவத்துக்கு காரணமாக இருந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பட்டினப்பாக்கம் சீனிவாச புரத்தைச் சேர்ந்த ஆசிரியை நந்தினியிடம் பணத்தை வழிப்பறி செய்வதற்காக ஒருவர் இரு சக்கர வாகனத்தில் துரத்தியதில், நந்தினி கீழே விழுந்து மரணமடைந்தார். பிடிபட்ட குற்றவாளி கருணாகரன் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையால், அப்பகுதி யில் பல்வேறு குற்றச் சம்ப வங்கள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பட்டினப்பாக்கம் கடல் அறக்கட்டளை தலைவர் ஆக்னஸ் கூறும்போது, "பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மையமாக வைத்து பல குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. அந்த டாஸ்மாக் கடையில் குடிக்கச் சென்றபோது பாட்டிலில் மதுவின் அளவு குறைவாக உள்ளது என்று எழுந்த வாக்குவாதத்தால் கடந்தாண்டு ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் சில்லறை குறைந்தது என்று கூறி சண்டை யிட்டதால் கொலை செய்யப் பட்டார். இதேபோல், அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் 2 பேர் மரணமடைந் தனர். பஸ் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். இந்த குற்றச்செயல்கள் அனைத்துக்கும் காரணமான இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று நாங்கள் பல முறை போராட்டம் நடத்தியும். இதை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை

சீனிவாசபுரத்தை சேர்ந்த எம்.ரேவதி என்பவர் கூறும்போது, "பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையால் நிம்மதியே இல்லாமல் உள்ளோம். 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வர முடியாத அளவுக்கு குடிகாரர்கள் தொல்லை செய் கின்றனர். வேண்டுமென்றே இடிக்க வருவது, எச்சில் துப்புவது , பெண் களை கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்" என்றார்.