

‘பைரவா’ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து திரையரங்குகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படத்துக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணத்தை திரையரங்குகள் வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுபற்றி பொதுமக்கள் புகார் அளித்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது. இந்நிலையில் ‘பைரவா’ திரையிடப்பட்ட திரையரங்குகளில் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அண்ணாசாலையில் உள்ள தேவி காம்ப்ளக்ஸ் மேலாளர் சங்கர் கூறும்போது, “எங்களுடைய திரையரங்கில் ‘பைரவா’ படம் திரையிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். நாங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிப்பதால் எங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் எழவில்லை” என்றார்.
இதற்கு முன்பு ‘கபாலி’ படம் ரிலீஸானபோதும் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.