

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பாண்டியன்(46). மன்னார் குடியைச் சேர்ந்த இவர் நேற்று காலை காரில் சென்னைக்கு தன் நண்பர்கள் 4 பேருடன் சென்று கொண்டு இருந்தார்.
திண்டிவனம் புறவழிச் சாலையை கடக்கும்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் புறவழிச் சாலையில் திரும்ப முயன்றபோது பிஸ்கட் ஏற்றி வந்த லாரி காரின் பக்கவாட்டில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த பி.ஆர்.பாண்டியன் பலத்த காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவ ருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கொல்ல சதியா?
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில், மீத்தேன் எடுக்கும் திட்டம், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக நான் போராடி வருகிறேன். காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த இருந்த சூழலில், இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதை பார்க்கும்போது, என்னை கொலை செய்வதற்கு சதி நடப்பதாகவே சந்தேகிக்கிறேன்.
எனவே, காவல்துறை எனக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, லாரி மோதிய விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டுபிடிக்க வேண்டும். எது நடந்தாலும், 13-ம் தேதி (இன்று) அனைத்துக் கட்சி கூட்டம் நிச்சயம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.