Published : 15 May 2017 07:54 AM
Last Updated : 15 May 2017 07:54 AM

ஜெ. சிந்தனையில் உருவானதே மெட்ரோ ரயில் திட்டம்: மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் தகவல்

ஜெயலலிதாவின் சிந்தனையில் உருவானதுதான் மெட்ரோ ரயில் திட்டம் என அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது:

சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக அடிக்கடி போக்கு வரத்து நெரிசல்கள் ஏற்படுவதை அறிந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதைப் போக்க என்ன வழி என்று சிந்தித்ததன் விளைவாக உதித்ததுதான் இந்த மெட்ரோ ரயில் திட்டம். சென்னை நகரில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக் கூறுகள் 2003-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் முதன்முதலில் மேற்கொள்ளப் பட்டது.

இதையடுத்துதான், வண்ணாரப் பேட்டை-சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம்-பரங்கிமலை என இருவழித் தடத்தில் 45 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடிவெடுக்கப்பட்டு இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2004-ம் ஆண்டு உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், 2006-ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரண மாக இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் செல்வாக்குடன் இருந்த திமுக இந்தத் திட்டத்தை தங்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.

திமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட காலதாமதம் காரணமாக இத்திட்டத்தின் தற்போதைய உத்தேச மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த திட்டச் செலவு ரூ.14,600 கோடி. இதில் மத்திய அரசு பங்கு மூலதனமாக 15 சதவீதமும், சார்நிலைக் கடனாக 5 சதவீதமும் வழங்குகிறது. தமிழக அரசு பங்கு மூலதனமாக 15 சதவீதமும், சார்நிலைக் கடனாக 5.78 சதவீதமும் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 விழுக்காடு தொகை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து கடனாகப் பெறப்பட்டது. ரூ.14,600 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.1,143 கோடி மட்டுமே செலவிடப்பட்டது.

ஆனால், 2011-ம் ஆண்டு ஜெய லலிதா பொறுப்பேற்றது முதல் இன்று வரை கிட்டத்தட்ட ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட் டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, சுமார் 53 சதவீதம் தரைக்கு அடியிலும், 47 சதவீதம் தரை மட்டத்திலும், உயர் மட்டத்திலும் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 2013 அக்டோபர் 6-ம் தேதி மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையி லான 10.15 கி.மீட்டர் மெட்ரோ ரயில் சேவையை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்து பேசியபோது வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குமாறு கோரினார். இதையடுத்து, 2016-ம் ஆண்டு மத்திய அரசு இதற்கு ஒப்புதல் வழங்கியது.

திமுக ஆட்சிக் காலத்தில் 3 சதவீதம் பணிகளே முடிவுற்ற நிலையில் கடந்த 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆக, இத்திட்டத்துக்கு வித்திட்டு வடிவமைத்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

இவ்வாறு மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x