சிந்தனைத் திறனை அதிகரிக்கும் கல்வி முறை அமையுமா? - கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

சிந்தனைத் திறனை அதிகரிக்கும் கல்வி முறை அமையுமா? - கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு
Updated on
2 min read

பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் பள்ளிக் குழந்தைகளை மாவட்ட, மாநில அளவில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் வரிசைப்படுத்தி அறிவிக்கும் ரேங்க் முறை இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிவு வெளியாகும்போது எந்த பள்ளி, எந்த மாணவர் மாநில ‘ரேங்க்’ எடுப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆரம்ப காலங்களில் இந்த போட்டி ஆரோக்கியமாக பார்க்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களை மையப்படுத்தி நடக்கும் இந்த போட்டி, பள்ளி நிர்வாகங்கள், பெற்றோரால் மாணவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தது. தற்போது இந்த ‘ரேங்க்’ பட்டியல் முறையை தமிழக அரசு ரத்து செய்த பிறகு, நேற்று முதல்முறையாக பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. இந்த முறைக்கு பலத்த வரவேற்பு கிடைத்தாலும், சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் ஆ.காட்சன் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் ஒரு சதவீதம் பேர்தான் (சில ஆயிரம் பேர்) மாநில அளவிலான ‘ரேங்க்’ பட்டியலை எதிர்பார்த்து படிப்பார்கள். அதில் ஒருசிலர்தான் அந்த நிலையை அடைய முடியும். அதற்காக ரேங்க் வராமல் இருப்பவர்கள், தகுதியில்லாதவர்களாகக் கருதமுடியாது. ஆனால், ஓரிரு மதிப்பெண்ணில் இந்த வாய்ப்பை தவற விடுகிற பள்ளி குழந்தைகள் ஏதோ தங்கள் படிப்புக்குக் கிடைத்த தோல்வியாகவும், தங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காத மாதிரியும் விரக்தியடைந்து மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஒருசிலர் அதை, தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய தோல்வியாகவும் பின்னடைவாகவும் எடுத்துக்கொள்கின்றனர். இதற்கு பிறகு தங்களால் சாதிக்க முடியாது என்ற முடிவுக்கும் வந்துவிடுகின்றனர். கடந்த காலத்தில் படிப்பில் பின்தங்கிய மாணவர்கள்தான் பள்ளி, கல்லூரியில் படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு படித்து ஓரிரு மதிப்பெண்ணில் ரேங்க்கை தவறவிடும் மாணவர்கள், கல்லூரி படிப்பை தொடராமல் விரக்தியில் நிறுத்துவது அதிகரித்தது.

பெற்றோர், ஆசிரியர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை மாணவர்கள் மீது திணிப்பதும், அவர்களை அதை நிறைவேற்றும் கருவியாக நினைப்பதும் அவர்களுக்கு பெரிய மனச்சுமையாக இருக்கிறது. தற்போது அறிவித்துள்ள ரேங்க் முறை ரத்து அறிவிப்பு, மாநில ரேங்குக்காக படித்த சில மாணவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். ஆனால், 99 சதவீதம் மாணவர்களை, அவர்கள் பெற்றோர் பிற மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தங்களுடைய சுய கவுரவத்தைக் குறைத்து மதிப்பீடும் மனநிலை தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரும், காந்திகிராம பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவருமான பேராசிரியர் ஜாகிதா பேகம் கூறியதாவது:

மாநில அரசு கல்வி முறையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தங்களில் உள்ள வினாக்களுக்கு விடைகள் அந்தப் புத்தகங்களிலேயே குறிப்பிட்டுள்ளன. அவற்றை மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறக்கூடிய, தாழ்நிலை சிந்தனைத் திறன் கல்வி முறை தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் 200-க்கு 200 மதிப்பெண் பெறும் ஒரு மாணவர், அந்த பாடத்தில் நிபுணத்துவம் பெற்றுவிட்டார் எனக் கூற முடியாது.

எப்போது ஒரு பாடத்தில் உயர்நிலை சிந்தனைத் திறன்களை சோதிக்கின்ற வினாக்கள் அதிகமாகக் கேட்கப்படுகிறதோ, அந்தத் தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண் பெறுவது கடினம். அதாவது புத்தகத்தில் நேரடியாக இந்த பதில்கள் தரப்படாதபோதும், மாணவர் தன் சிந்திக்கும் ஆற்றலால், தான் படித்த பாடத்தைத் தொகுத்து ஆராய்ந்து பதில் அளிக்கும் உயர்நிலை சிந்தனைத் திறன் கல்வி முறை அமைய வேண்டும். இத்தகைய உயர்நிலை சிந்தனை கேள்விகள்தான் போட்டித் தேர்வுகளில் அதிகம் கேட்கப்படுகின்றன. ‘இதுதான் கேள்வி, இதுதான் பதில்’ என்று கிளிப்பிள்ளைகளை உருவாக்கும் கல்வி முறை மாற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in