

மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரி டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத் தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.வீரையன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எட்வின் ஆரோக்கியராஜ், நிர்வாகிகள் ராஜசேகர், கண்ணன், முருகேசன் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். தொடர்பணி வழங்குவதில் வெளிப்படையான, பாரபட்சமற்ற நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ பிடித்தம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 4-ம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
திருவாரூரில்…
இதேபோல, தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்கள் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் ஏ.முத்துவேல் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பி.பாப்பையன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவாரூர் டாஸ்மாக் சங்க நிர்வாகி புவனேந்திரன் நன்றி கூறினார்.