

நடப்பு ஏப்ரல் மாதத்தில் 16 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு சென்னை மீனம்பாக்கத்தில் சுமார் 14 நாட்களுக்கு வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல் பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை ‘அதிவெப்ப நாட்கள்’ என்று அழைக்கிறது. சென்னையில் பிரதான இடங்களில் ஏப்ரல் 16-ம் தேதி 39.7 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.
கடற்காற்று வரும் பகுதிகளை விட கடலைவிட்டு தள்ளியிருக்கும் சென்னையின் பிற பகுதிகளில் சீராக 37.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் மே 1-ம் தேதி முதல் சராசரி வெப்ப அளவைக்காட்டிலும் 2-3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் வானிலை விவரங்களை வெளியிட்டு வரும் கே.ஸ்ரீகாந்து கூறும் போது, 2009-லிருந்து மீனம்ப்பாக்கத்தில் பதிவாகும் வெப்ப நிலை சீராக அதிகரித்து வந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையின் புறநகர் பகுதிகளில் 9 நாட்கள் கடும் வெப்ப நிலை நீடித்தது.
சென்னை வானிலை ஆய்வு மைய உதவி இயக்குநர் எஸ்.பி. தம்ப்பி கூறும்போது, வேலூர், தேனி, கிருஷ்ணகிரி, கோவை ஆகிய இடங்களில் ஞாயிறன்று கடும் மழைக்குப் பிறகு மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் மே 1-ம் தேதி முதல் இயல்பான வெப்ப அளவைக்காட்டிலும் 2-3 டிகிரி செல்சியஸ் வெயில் கூடுதலாக அடிக்கும் என்கிறார் அவர். சராசரி வெப்ப நிலை மெதுவே இந்த வாரத்தில் அதிகரிக்கும். மரங்களின்மையும், நகர்ப்புற வெப்பத்தீவு விளைவு ஆகியவற்றினால் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கவே செய்யும் என்கின்றனர் நிபுணர்கள்.