ராமேசுவரம் பேக்கரும்பில் கலாம் நினைவு மணிமண்டபத்துக்கு நிலம் ஒதுக்க தாமதம் செய்வதாக புகார்

ராமேசுவரம் பேக்கரும்பில் கலாம் நினைவு மணிமண்டபத்துக்கு நிலம் ஒதுக்க தாமதம் செய்வதாக புகார்
Updated on
1 min read

ராமேசுவரம் பேக்கரும்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு மணி மண்டபத்துக்கு நிலம் ஒதுக்குவதில் தமிழக அரசு தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி ஷில்லாங்கில் ஒரு விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது மரணமடைந்தார். அவரது உடல், கலாமின் சொந்த ஊரான ராமேசுவரம் அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பேக்கரும்பில் மணிமண்டபம் கட்டப்படும் என 2015-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி கலாமின் 84-வது பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான கடந்த ஜூலை 27 அன்று மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பேக்கரும்பில் 6 ஏக்கர் பரப்பில் கலாம் நினைவிடம், நூலகம், அருங்காட்சியகம், அரங்கம், பூங்கா, வாகன நிறுத்துமிடம், அலுவலகம் அமைக்கப்பட்டு பணிகளை 2017-ம் ஆண்டு ஜூலை முதல் வாரத்துக்குள் முடித்து 2-வது நினைவு நாளான 27.7.2017 அன்று கலாமின் மணி மண்டபத்தை பிரதமர் மோடி திறந்துவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மணிமண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிரானைட் கற்களால் உருவாக்கப்படும் இந்த மணிமண்டபத்தில், அப்துல் கலாம் விஞ்ஞானியாக பணியாற்றிய காலம், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய காலம், அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய தருணம், குடியரசுத் தலைவராக பணியாற்றிய காலம் என நான்கு பிரிவுகள் கொண்ட கூடங்களும், கலாம் தொடர்பான அரிய புகைப்படங்கள், கலாம் கண்டுபிடிப்பின் மாதிரிகள், அவர் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள் இடம்பெற உள்ளன.

இதுகுறித்து கலாமின் அண்ணன் மகன் ஹாஜா இப்ராகிம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மத்திய அரசு அப்துல் கலாமின் மணிமண்டபப் பணிகளுக்கு மாநில அரசிடம் 6 ஏக்கர் நிலம் கோரியிருந்தது. ஆனால், இதுவரை சுமார் 3 ஏக்கர் நிலத்தை மட்டுமே மாநில அரசு வழங்கி உள்ளது. இதனால் மணிமண்டபத்தில் அமைய இருக்கும் அறிவுசார் மையம், பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, கலாம் நினைவிடத்துக்கு தேவையான எஞ்சிய நிலத்தை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in