

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைவில் அதிமுக-வில் இணைவார் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நடராஜன் கூறியதாவது:
“தீபாவையும் அவரது சகோதரர் தீபக்கையும் எங்கள் பிள்ளைகளாகவே பாவிக்கிறோம். சில அரசியல்வாதிகள் தீபாவை தவறாக வழிநடத்துகின்றனர், ஆனால் விரைவில் அவர் அதிமுகவில் இணைவார் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
சென்னையில் நேற்று தீபா கூறும்போது, அரசியலில் நுழைவதாக தெரிவித்ததோடு, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை ஏற்க முடியாது என்று தெளிவாகக் கூறினார்.
நடராஜன், பாஜக பற்றிய தனது கருத்தை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திய போது, பாஜக-வில் சில பிரிவினர் அதிமுக-வை உடைக்க முயற்சி செய்கின்றனர், ஆனால் அது நடக்காது என்றார்.
நரேந்திர மோடி நல்ல மனிதர் என்று கூறிய நடராஜன், ஜல்லிக்கட்டு பற்றி கூறும்போது, 'மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்' என்றார், போராட்டங்கள் பற்றி கூறும்போது, 'தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்றனர்' என்றார்.