

மாநில மகளிர் ஆணைய அலுவலகம் செயல்பட்ட கட்டிடம் 245 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கட்டிடம் மிகவும் பழமையானது என்றும், கட்டமைப்பு வலுவிழந்த நிலையில் இருப்பதால் கட்டிடத்தை காலி செய்யும்படியும் கடந்த 2007-ம் ஆண்டில் இருந்தே மாநில மகளிர் ஆணையத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீஸ் அனுப்பினர்.
சென்னை எழிலகத்தில் வியாழக் கிழமை மாநில மகளி்ர் ஆணைய அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து எழிலக வளாகத்தில் மிகவும் பழமையான பாரம்பரிய கட்டிடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அச்சத்திலேயே பணியாற்றுகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக கட்டிடத்தில் பல்வேறு அரசுத் துறைகள் செயல் பட்டு வருகின்றன. இங்குள்ள கலச மஹால் கட்டிடத்தில் நிலச்சீர்திருத்தத் துறை இருந்த இடத்தில் கடந்த ஆண்டு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் அன்பழகன் பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்புத் துறை அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் பலத்த தீக்காயம் அடைந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த மற்ற அரசு அலுவலகங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.
இருந்தாலும் வேறு பல அரசுத் துறைகள் அங்கேயே தொடர்ந்து இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் அரசு ஊழியர்கள் எந்த நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே வேலை பார்க்கின்றனர்.
கலச மஹால் கட்டிடம் மட்டுமல்லாமல் எழிலக வளாகத்தில் உள்ள பல கட்டிடங்கள் மிகவும் பழமையான, பாரம்பரிய கட்டிங்களாகவே இருக்கின்றன. அவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், கலச மஹால் அருகே உள்ள பழமையான கட்டிடத்தில் செயல்பட்ட மாநில மகளிர் ஆணையத்தின் மேற்கூரை வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது. அந்த நேரம் அங்குள்ள ஊழியர்கள் பலர் சாப்பிடுவதற்காக வெளியே சென்றிருந்ததால் உயிரிழப்பு இல்லை. அந்த அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வேலைக்கு வந்தபோது அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் விரிசல் விட்டி ருந்த இடத்தில் இருந்து மணல் கொட்டியிருக்கிறது. அதைப்பார்த்து பயந்த பல ஊழியர்கள் முன் எச்சரிக்கையாக வெளியேறிவிட்டனர். இந்த கட்டிடங்களைப் பராமரிக்கும் பொதுப் பணித்துறை அதிகாரி களுக்கும் உடனே தகவல் தெரி விக்கப்பட்டது. ஊழியர்கள் வெளி யேறிய சிறிது நேரத்தில் மேற்கூரை முற்றிலுமாக இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் எழிலக வளா கத்தில் உள்ள பழமையான கட்டி டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கட்டிடம் மிகவும் பழமையானது என்றும், கட்டமைப்பு வலுவிழந்த நிலையில் இருப்பதால் 1200 சதுர அடி கொண்ட அந்த கட்டிடத்தை காலி செய்யும்படி கடந்த 2007-ம் ஆண்டில் இருந்தே மாநில மகளிர் ஆணையத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீஸ் அனுப்பி கேட்டுக் கொண்டனர். குமாயூன் மஹால் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம், 1768-ம் ஆண்டு கட்டப்பட்டு, ஆற்காடு நவாப்புக்கு சொந்தமானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.