

தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட 610 புதிய பஸ்களை, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார். சென்னை மாநகர மக்கள் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் 50 மினி பஸ்களையும் முதல்வர் இயக்கி வைக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட எட்டு கோட்டங்களுக்கு 6 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இதில் விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 950 பஸ்கள் உள்பட 3 ஆயிரம் புதிய பஸ்கள் ஏற்கனவே வாங்கப்பட்டது.
தற்போது மேலும் 610 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று காலை நடக்கும் நிகழ்ச்சியில் புதிய பஸ்களை முதல்வர் ஜெய லலிதா கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர், ‘தி இந்து’ நிருபரிடம் கூறுகையில், “சென்னை மாநகரில் 100 மினி பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 50 மினி பஸ்கள் புதன்கிழமை முதல் இயக்கப்பட உள்ளன. இதுதவிர, விழுப்புரம் கோட்டத்துக்கு 104, கும்பகோணம் கோட்டத்துக்கு 160 உள்பட 610 புதிய பஸ்களும் தொடக்கி வைக்கப்படுகிறது” என்றார்.
ஷேர் ஆட்டோக்களுக்கு போட்டி
மினி பஸ்களை புறநகர்ப் பகுதிகளிலும், தொலைதூரப் பகுதிகளிலும் அதிக அளவில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், ஷேர் ஆட்டோக்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். டிக்கெட் விலையும் மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்படுவதால் பயணிகளிடையே மினி பஸ்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.