Last Updated : 25 Oct, 2014 10:20 AM

 

Published : 25 Oct 2014 10:20 AM
Last Updated : 25 Oct 2014 10:20 AM

பெங்களூர் மருத்துவமனையில் மதானியுடன் திருமாவளவன் 3 மணி நேரம் பேச்சு: தலித் இஸ்லாமியர் ஒற்றுமை குறித்து பேசியதாக தகவல்

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள‌ கேரள மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த புதன்கிழமை பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சந்தித்து பேசியுள்ளார்.

சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது ம‌தானியின் மனைவி சூஃபியா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மு.முகமது யூசுப், ஆளூர் ஷாநவாஸ், ஜெ.முபாரக் மற்றும் கர்நாடக மாநிலப் பொறுப்பாளர் தலித் நாகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மதானிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூர் போலீ ஸார் அவரை கைது செய்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மதானி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுவரும் மதானியை கேரள முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகளும் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி இரவு தொல்.திருமாவளவன் பெங்களூரில் உள்ள மல்லிகை மருத்துவமனையில் மதானியை சந்தித்து பேசியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் மதானி

இந்த சந்திப்பு குறித்து திருமா வளவன் கூறியதாவது: எங்கள் கட்சி சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு மதானிக்கு 'காயிதே மில்லத்' விருது வழங்கி னோம். ஆனால் அவரால் நேரில் வரமுடியவில்லை. என்னை கேரளா வருமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரை சந்திக்கும் வாய்ப்பு நழுவிக்கொண்டே போனது. இந்நிலையில் மதானியை மருத்துவமனையில் தனிமையில் சந்தித்து சுமார் 3 மணி நேரம் மனம் திறந்து பேச வாய்ப்பு கிடைத்தது.

நான் சென்றபோது மதானி தொழுகையில் இருந்தார். சிறிது நேரம் காத்திருந்து அவரை சந்தித்தேன். தொடர்ந்து பொய் வழக்கில் கைது செய்யப்பட்டும், நீதி ம‌றுக்கப்பட்டு, சிறை கொட்டடியில் நோயில் வாடும் அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்தேன். 4 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனை அவரது நெஞ்சுறுதியை பாதிக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.

டாக்டர் அம்பேத்கரின் நூல்களை படித்தது பற்றியும், கேரளாவில் தலித்துகளின் பிரச்சினைகளுக்காக அவர் போராடியது பற்றியும் தெரிவித்தார். மேலும் தனது முதல் வாக்கை தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கே செலுத்தியதாகவும், அவரது கட்சி சார்பாக பொது தொகுதிகளில் தலித் வேட்பாளர் களை நிறுத்தியதையும் நினைவு கூர்ந்தார். இடையிடையே தனது மனைவியிடம் இந்த சந்திப்பு குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிய வேண்டிய கருத்துகளையும் கூறிக்கொண்டே இருந்தார்.

தலித் - இஸ்லாமியர் கூட்டணி

ஒடுக்கப்பட்டிருக்கும் தலித்து களும், சிறுபான்மையின மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். அப்போதுதான் சமூகநீதி நிறைந்த அரசியல் களத்தை உருவாக்க முடியும். குறிப்பாக மதத்தின் பெயரால் ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களும், சாதியின் பெயரால் ஒடுக்கப்படும் தலித்துகளும் ஒருங்கிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எனவே தமிழகத்தில் இஸ்லாமிய மக்களோடு இணைந்து அரசியல் பயணத்தை தொடர வேண்டும். தேர்தலில் மட்டுமின்றி சமூக விடுதலைப் போராட்டத்திலும் தலித்துகளும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் ஒரு குறிப்பிட்ட அரசியல் எழுச்சியை ஏற்படுத்தமுடியும் என்று மதானி நிறைய தகவல்களை மனம் திறந்து பகிர்ந்துக்கொண்டார்” என்றார்.

திருமாவுக்கு எத்தனை பிள்ளைகள்?

இந்த சந்திப்பு முடிந்து திருமாவளவன் விடைபெறும்போது மதானி அவரிடம் “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டுள்ளார். இதற்கு திருமா, தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியிருக்கிறார்.

உடனே மதானி, “பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் அவசியம் திருமணம் செய்துகொள்ள வேண்டும். நீங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x