தொடர் மழை எதிரொலி: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தினமும் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு

தொடர் மழை எதிரொலி: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தினமும் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு
Updated on
1 min read

சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நாளொன்றுக்கு ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மார்க்கெட்டை நம்பி 5 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு நாளொன்றுக்கு ரூ.20 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இங்கிருந்து 5 ஆயிரம் சிறு வியாபாரிகள், காய்கறிகளை வாங்கிச் சென்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழையால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நாளொன்றுக்கு ரூ.10 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படுவதாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறிய தாவது:

தொடர் மழை காரணமாக சிறு வியாபாரிகள் கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிச் செல்வது 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும் நேரடியாக காய்கறிகளை வாங்கிச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதனால் தினந்தோறும் ரூ.10 கோடி வரை வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வாங்கி வைத்த காய்கறிகள் விற்பனையாகாததால், அவை அழுகத் தொடங்கியுள்ளன.

வழக்கமாக தீபாவளி நேரத்தில் காய்கறிகளின் விற்பனை அதிகமாக இருக்கும். தொடர் மழையால் எதிர்பார்த்த அளவுக்கு வர்த்தகம் இல்லை.

இந்த தீபாவளி எங்களுக்கு மகிழ்ச்சி இல்லாத தீபாவளியாகவே இருந்தது. மழை காரணமாக தற்போது வெளியில் இருந்து வாங்கும் காய்கறிகளின் அளவை குறைத்திருக்கிறோம். வெள்ளிக்கிழமை நிலவரப்படி காய்கறி வரத்து 450-ல் இருந்து 350 லோடாக குறைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் பெய்துவரும் தொடர் மழை தெருவோர கடைகளுக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மயிலாப்பூர், மந்தைவெளி, சைதாபேட்டை, தாம்பரம், கொடுங்கையூர், பெரம்பூர், தண்டையார்பேட்டை மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தெருவோர காய்கறி கடைகளை பார்க்க முடியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in