

ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி உழவன் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(53). ஜவுளி வியாபாரி. ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியில், 20 ஆண்டுகளாக ஜவுளித் தொழிலில் ஈடுபட்ட இவர், நூலை வாங்கி அவற்றை காடா துணியாக மாற்றி விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி மாலதி(47). இவர்களது மகள் கீர்த்தனா(18). கல்லூரி மாணவி.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் கடன் சுமையில் ரவிச்சந்திரன் இருந்துள்ளார். நேற்று அதிகாலை ரவிச்சந்திரன், அவர் மனைவி, மகள் ஆகியோரின் செல்போன் எண்களில் அவரது உறவினர் நல்லசிவம் அழைத்தபோது போனை யாரும் எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த நல்லசிவம் அவரது வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் முன்புற கதவு உட்புறம் தாளிடப்படாமல் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 3 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரம்பட்டி போலீஸார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் விவரம் தொடர்பாக ரவிச்சந்திரன் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.