

திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கில் முழுமையாக புலன் விசாரணை நடத்த மேலும் 4 வாரம் அவகாசம் வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
திருச்செங்கோடு அருகே காதல் விவகாரத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா விசாரித்து வந்தார். இந்நிலையில், 2015 செப்டம்பர் 18-ம் தேதி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் விஷ்ணுபிரியா சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தபோது, இதை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘வழக்கை சிபிஐ விசாரித்து 3 மாதங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணையும் தொடங்கியது.
இந்நிலையில், சிபிஐ காவல் கண்காணிப்பாளர் டி.ராஜா பாலாஜி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் வழங்கியது. புலன்விசாரணை சுமுகமாக நடந்து வருகிறது. இருப்பினும், புலன் விசாரணையை முழுமையாக முடிக்க மேலும் 4 மாதம் தேவைப்படும் என்ப தால் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரப் பட்டுள்ளது. இந்த வழக்கு விரை வில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.