

மெட்ரோ ரயில் திட்டத்தில் 45 கி.மீ. தொலைவுக்கு தொடங்கப்பட்ட முதல் கட்ட பணிகளில் கோயம் பேட்டில் இருந்து பரங்கி மலை மற்றும் சின்ன மலையில் இருந்து விமான நிலையம் என 21 கி.மீ. தொலைவுக்கு உயர்த்தப்பட்ட வழித் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட் டுள்ளது.
சுரங்க வழித்தடப் பகுதிகளிலும் பணிகளில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு நேரு பூங்கா வரையிலான முதல் சுரங்க வழித்தடப் பகுதியில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடத்தை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர்/ விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கும் பணிகள் ரூ.3,770 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில் திட்டத்தில் 2-வதுகட்ட பணிகளாக, மொத்தம் 107.5 கி.மீ கொண்ட 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கும் திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
9 முக்கிய இணைப்பு சாலைகளை 6 வழி சாலையாக மேம்படுத்த முடிவு
முக்கியமான நெடுஞ்சாலைகளை இணைக்கும் ஒன்பது முக்கிய இணைப்பு சாலைகளை நான்கு அல்லது ஆறுவழி சாலைகளாக மேம்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்ப தாவது:
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதி களில் வேகமாக ஏற்பட்டு வரும் நகரமயமாதல் மற்றும் தொழில் வளர்ச்சித் தேவைகளைக் கருத்தில் கொண்டு முக்கிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் 141.60 கி.மீ நீளமுள்ள 9 முக்கியமான இணைப்பு சாலைகளை நான்குவழி அல்லது ஆறு வழிச் சாலைகளாகவும் மேம்படுத்த ரூ.744 கோடி அளவிலான பணிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு முதல்கட்டமாக 2017-18 பட்ஜெட்டில் ரூ232.20 கோடி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.13 ஆயிரம் கோடி செலவிலான சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டம், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் ஆய்வில் உள்ளது. இத்திட்டத்தின் முதல்கட்டப் பணியான, தேசிய நெடுஞ்சாலை எண் 5-ஐ இணைக்கும் எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான வடக்கு துறைமுக அணுகுசாலையை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டப்பணிக்காக ரூ.951 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.
தொழில் துறைக்கு பட்ஜெட்டில் சலுகைகள்: உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தமிழக பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதை தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து, கிண்டியில் உள்ள தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்கிறது. குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்தில் சேர்ந்ததன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,335 கோடி மிச்சம் ஆகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் பிளாஸ்டிக் தொழில் பூங்கா அமைக்க ரூ.264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதன மானியம் ரூ.80 கோடியில் இருந்து ரூ.160 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் எம்எஸ்எம்இ சங்கங்கள் மூலம் வர்த்தக மையம் அமைக்க அதிகபட்சமாக 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்கோ தொழிற்பேட்டையில் 3 தர பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3,957 கோடி முதலீட்டில் நில வங்கி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிவிப்புகளை எங்கள் சங்கம் வரவேற்கிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.