Published : 03 Jun 2015 10:53 PM
Last Updated : 03 Jun 2015 10:53 PM

ஸ்டாலின் கட்சிப் பதவி: கருணாநிதியின் சூசகப் பேச்சால் திமுக தொண்டர்கள் உற்சாகம்

திமுக அடுத்த தலைமை மு.க.ஸ்டாலின்தான் என்று பொருள்படும்படியாக, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி சூசகமாக பேசினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 92-வது பிறந்தநாளை ஒட்டி பொதுக்கூட்டம் இன்று (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.

முரசொலி அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்தனர்.

இதில் திமுக தலைவர் கருணாநிதி ஏற்புரை நிகழ்த்தினார். ஏற்புரையில் கருணாநிதி பேசத் தொடங்கியதும், பொருளாளர் ஸ்டாலின். இதுவரையில் பொருளாளர்...என்று சூசகமாக சொன்னதும், அரங்கில் இருந்த தொண்டர்களின் உற்சாகக் கரவொலி அந்த இடத்தையே அதிர வைத்தது. ஸ்டாலின் இயல்பு மாறாமல் புன்னகைத்தார்.

இதுவரையில் பொருளாளர்... புரிந்துகொண்டால் சரி, புரியாவிட்டால் பரவாயில்லை என்று கருணாநிதி பேசினார். ஸ்டாலினுக்கு திமுகவில் புதிய பதவி காத்துக்கொண்டிருக்கிறது என்பதை கருணாநிதி சூசகமாக வெளிப்படுத்தினார்.

மேலும், கருணாநிதி பேசுகையில், வெள்ளம் போல் திரண்டுள்ள இந்த மாபெரும் பொதுக் கூட்டத்தின் தலைவர், சென்னை மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் ஜெ.அன்பழகன், முன்னிலை ஏற்றுள்ள கழகத்தின் பொருளாளர்... இதுவரையில் பொருளாளர். புரிந்து கொண்டால் சரி... புரியாவிட்டால் பரவாயில்லை. புரிந்து கொண்டு இந்த மாபெரும் விழாப் பெருவெளியில் என்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து வரவேற்பளித்துள்ள கழகத்தினுடைய பல்வேறு அமைப்புகளின் செயலாளர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..!

ஸ்டாலினும், துரை முருகனும் நீண்ட நேரம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வலிவு, பொலிவு, பெற வேண்டிய வளர்ச்சி, பெற்றுள்ள வளர்ச்சி இவற்றைப் பற்றியெல்லாம் உரையாற்றியிருக்கிறார்கள். நான் அதிக நேரம் உரையாற்றி உங்களுடைய பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை. ஆனால் இந்தக் கடல் போன்ற மக்கள் திரளில் ஒரு சில வார்த்தைகளைச் சொல்லாவிட்டால், பார், பார், கருணாநிதிக்கு அவரைப் பற்றி இங்கே வெளியிட்ட கருத்துகளுக்கு ஒப்புதல் இல்லை போலும் என்று விஷமத்தனமாக, விகாரத்தனமாக, சிண்டு முடிகிற பாணியில் பேசத் தொடங்குவார்கள், எழுதத் தொடங்குவார்கள். ஆகவே தான் இந்த விழாவில் பங்கு பெற்றதிலும் பங்கு பெற்றுள்ள என்னுடைய அருமைத் தம்பிமார்களைப் பாராட்டுவதிலும் ஒருமித்த கருத்தோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்றைக்கு இந்தக் கூட்டம் தொடங்குகிற நேரத்தில் நான் புதிதாக எழுதுகின்ற 'ராமானுஜர்' படத்தினுடைய விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அது ஒரு படத்திற்கு கதை வசனம் எழுதி காசு சம்பாதிப்பதற்காக அல்ல. நான் இன்று நேற்றல்ல; பல்லாண்டுகளாக எழுதுகின்ற படங்கள் எல்லாமே எழுச்சி ஊட்டுவதாக, தாய்த் தமிழகத்திற்கு தடந்தோள் தட்டுகின்ற வீரத்தைத் தருவதற்காக எழுதப்பட்ட படங்கள் தான் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.

கலைத்துறை மூலம் கட்சி வளர்ச்சி

'பூம்புகார்' படத்தைத் தந்திருக்கிறேன்; 'பராசக்தி'யை வழங்கியிருக்கிறேன்; 'மனோகரா' தீட்டியிருக்கிறேன். இவைகளில் எல்லாம் என்ன கருத்துகள் எடுத்தாளப்பட்டதோ, அந்தக் கருத்துகள் அடங்கிய சில படங்களிலே அண்ணாவின் கொள்கைகளை, பெரியாரின் தத்துவங்களை, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எண்ணங்களை நம்முடைய வலிவுக்கேற்ப, பொலிவுக்கேற்ப எடுத்துச் சொல்லி, இந்தக் கழகத்தை படத் துறையின் மூலமாக, கலைத் துறையின் மூலமாக வளர்ப்பதற்கு முயற்சிப்பதில் என்ன தவறு என்று கேட்டு, என்னைப் பின்பற்றி - மன்னிக்க வேண்டும் - என்னைப் பின்பற்றி அல்ல; அண்ணாவைப் பின்பற்றி என்னைப் போன்றவர்கள் இது போன்ற துறைகளில் ஈடுபட்ட காரணத்தால் தான் இன்றையதினம் வளமான, வலிமையான, ஒரு இயக்கத்தை நாம் காண முடிந்தது. அந்த இயக்கத்தினுடைய வளர்ச்சி நன்மையிலும் முடிந்தது, சில நேரங்களில் தீமையாகவும் முடிந்தது.

அந்தத் தீமை என்ன என்பதையெல்லாம் நான் இங்கே விளக்கி ஒரு நல்ல விழாவில் மகிழத்தக்க அளவிலே நாமெல்லாம் மாநாடு போல குழுமி யிருக்கின்ற விழாவில் மாசு ஏற்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் அந்த மாசு, மரு எல்லாம் தூசு போல நம்மால் பாவிக்கப்படும், நம்மால் விரட்டியடிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு தான் இன்றைய தினம் நாம் நம்முடைய கலைத் துறைப் பணிகளையும், லட்சியப் பணிகளில் ஒன்றாகக் கருதி ஆற்றிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பணிக்கு ஆதரவாக இருக்கின்ற அனைவரையும் நான் வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். அவர்களுக்கு ஆதரவு தரக் கடமைப் பட்டிருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துகிறேன்.

நான் எப்போது மகிழ்வேன்?

இன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நண்பர்கள், குறிப்பாக அன்பழகனைப் போன்றவர்கள், இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடைபெற எப்பாடு பட்டிருப்பார்கள் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன். அன்பழகனைப் போன்றவர்களிடம் எதிர்ப்பார்ப்பது - நீ இன்று என்னை அழைத்து வந்து, இது தான் நான் அமைத்துள்ள மேடை, இதுதான் இந்த மேடையில் வைக்கப் போகின்ற படம், கட்டிடம் என்று சொல்வதைக் காட்டிலும், நான் எப்போது மகிழ்வேன் என்றால், இதோ பாருங்கள் பட்டியலை; இந்தப் பட்டியல் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நாம் பெற்ற வெற்றிக்குக் கிடைத்துள்ள (கைதட்டல்) சன்மானம் என்று இந்த மாவட்டத்தில் மட்டும் பத்து அல்லது பதினைந்து சட்ட மன்ற உறுப்பினர்களை, பாராளுமன்ற உறுப்பினர்களை அன்பழகனைப் போன்றவர்கள் காட்டுவார்களானால் நான் அவர்களை அரவணைத்து, கட்டி அணைத்து, கை குலுக்கி, கரம் தழுவி மகிழ்ச்சியடைவேன். அந்த மகிழ்ச்சியை எனக்கு, அன்பழகனைப் போன்றவர்கள், சென்னை மாவட்டத்தில் மாத்திரமல்ல, தமிழகம் முழுவதுமுள்ள மாவட்டங்களில் தருவார்களானால் அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமே இருக்க முடியாது.

அந்த மகிழ்ச்சியை இந்த முறை எனக்குத் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏனென்றால் இங்கே மு.க.ஸ்டாலின் எப்படியெப்படி நாங்கள் பார்க்கிறோம் என்று கனவு கண்டு அல்ல, உள்ளபடியே அவர் எப்படிப்பட்ட வகையில் எல்லாம் எழில் குலுங்க இந்த இயக்கத்திலே தொண்டாற்றுவார், அவர் குவிக்க இருக்கின்ற வெற்றிகள் எத்தனை எத்தனை, என்றெல்லாம் என் மனக்கண் முன்னால் விரிந்த போது, நான் எண்ணிக் கொண்டேன்.

இப்பொழுது எனக்கு 90 வயது. சொல்லிக் கொள்ள வெட்கப்படவில்லை. என்னுடைய துணைவியார் இருக்கிற காரணத்தால், வயதைச் சொல்வது சரியல்ல. 90 வயது - இந்த 90 வயதுக்குள் நான் கண்ட - நாங்கள் கண்ட - நான் என்று தொடங்கி, நாங்கள் என்று விரித்துரைக்கக் காரணம் - நான் தஞ்சை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு உறுப்பினராக இருந்து தஞ்சை மாவட்டத்திலே ஒரு பொதுக் குழு உறுப்பினராக விளங்கி, அதற்குப் பிறகு இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவே ஆகியிருக்கிறேன் என்றால், எப்படிப்பட்ட வளர்ச்சி எனக்கு என்பதை எண்ணிப் பார்க்கின்றேன்.

ஒவ்வொரு இளைஞனும் கருணாநிதி ஆகலாம்!

அத்தகைய வளர்ச்சியை நம்முடைய தம்பிகள் பெற வேண்டுமென்பதிலே நான் எவ்வளவு ஆர்வமுடையவனாக இருக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஸ்டாலின் ஆனாலும், தம்பி துரைமுருகன் ஆனாலும் வேறு நம்முடைய நண்பர்கள் ஆனாலும் அவர்களெல்லாம் நாங்கள் பெற்ற இன்பம்; நீங்களும் பெற வேண்டும் என்கின்ற என்னுடைய வாழ்த்துக்கு உரியவர்கள். அந்த வாழ்த்துக்குரிய தம்பிமார்கள் இன்றைக்கு நாம் பாராட்டுகின்ற கடமை உணர்வோடு அவர்களுக்கும் சொல்வேன், மற்றவர்களுக்கும் சொல்கிறேன், எப்படி இருந்தார்கள், கருணாநிதி எப்படி இருந்தார், ஒரு காலத்திலே திருக்குவளை கிராமத்திலே உயர்நிலைப் பள்ளியிலே படிப்பதற்கு வழியில்லாமல் அலைந்து திரிந்து அவதிப்பட்டு, பிறகு எப்படியோ படித்து முடித்து பெரியாரை தலைவராகக் கொண்டு, அண்ணாவை தலைசிறந்த வழிகாட்டியாக ஆக்கிக் கொண்டு, கருணாநிதி முன்னேறினார் என்றால், அதைப்போல நாமும் முன்னேற வேண்டாமா என்று இந்த இயக்கத்திலே இருக்கின்ற ஒவ்வொரு இளைஞனும் நினைத்தால் போதும்; ஒவ்வொரு இளைஞனும் கருணாநிதி ஆகலாம், ஒவ்வொரு இளைஞனும் தளபதி ஸ்டாலின் ஆகலாம், ஒவ்வொரு இளைஞனும் துரைமுருகன் ஆகலாம், ஒவ்வொரு இளைஞனும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைமை தாங்கக் கூடிய ஆற்றல் பெற்றவராக ஆகலாம்.

இப்படிப்பட்ட ஒரு நிலையை எய்துவதற்காக நான் உங்களையெல்லாம் சந்திக்கின்ற நேரத்திலே ஒன்றைச் சொல்வேன், நீங்கள் உங்களுடைய வாழ்க்கையிலே - பொதுவாழ்க்கையிலே, அரசியல் வாழ்க்கையிலே, சமுதாய வாழ்க்கையிலே துறக்க வேண்டியது; ஒன்றும் பெரிதான விஷயம் அல்ல. துறக்க வேண்டியது இளைஞர்கள் தங்களுடைய சுயநலத்தை துறக்க வேண்டும். சுயநலத்தை இளைஞர்கள் துறந்து விட்டால், ஒவ்வொரு இளைஞனும் தான் நாடு காக்கின்ற, சமூகத்தைக் காப்பாற்றுகின்ற, ஜாதி ஒழிந்த, மத பேதமில்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்ற அந்தப் பணியைச் செய்ய வேண்டுமென்றால் அது ஒன்றும் பெரிய காரியமல்ல. மிகச் சுலபமான காரியம்தான்.

ராமானுஜரை எழுதுவது ஏன்?

நான் இன்றைக்குக்கூட ஏன் இளைஞர்களைத் தட்டி எழுப்ப வேண்டும் என்று எண்ணுகிறேன் என்றால், என்ன காரணத்திற்காக என்று கேட்டால், ஒன்றைச் சொல்லுவேன், இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கும், நாளைக்கு நீங்கள் தொடர்ந்து பார்க்க இருக்கிற "ராமானுஜர்" தொடரை நான் எழுதப் போகிறேன் என்று செய்தி வந்ததும் யார் யார் என்னென்ன வியப்புக்கு உள்ளானார்கள், என்னென்ன நகைப்புக்கு இடமளித்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு வரலாறை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஏதோ நான் ராமானுஜரைத் தேடிப்பிடித்து படமாக்குவதற்காக முன்வரவில்லை. ராமானுஜரை எனக்கு முன்னே நம்முடைய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தேடிப் பிடித்து ராமானுஜருடைய கதைக்கு அப்பொழுதே வசனம் எழுதினார். அப்படி ஏன் புரட்சிக் கவிஞர் ராமானுஜரைத் தேடி அலைந்து அவருடைய கதைக்கு வசனம் எழுதினார் என்றால், அவருடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவருக்குக் கிடைத்த ஒரு கருப்பொருளாக "ராமானுஜர்" அப்போது இருந்தார்.

ஜாதி இல்லை, மதம் இல்லை, மத உணர்வுகளுக்கு இடமில்லை, எல்லோரும் மனிதர்கள்தான், ஆண்டவன் சிருஷ்டியில் அத்தனை பேரும் சமம்தான். சமத்துவத்திற்கு உரிய இடத்தை பகிர்ந்து கொள்ள முடியாது என்று எண்ணிய காரணத்தினால்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - நாம் இன்றைக்கும் ஏற்றிப் போற்றுகின்ற, பாராட்டுகின்ற மாண்புமிகு கவிஞராக இருந்து வருகிறார். புரட்சிக் கவிஞர் ஏன் ராமானுஜரைத் தேர்ந்தெடுத்தார் என்று கேட்டால், வேறு வழியில்லை அவருக்கு; இவரைக் கொண்டாவது, இவருடைய கதையைச் சொல்லியாவது; இவருடைய வழியிலே மக்கள் நடக்கமாட்டார்களா? அப்படி நடந்தால் நாட்டில் ஜாதி ஒழியாதா? மத பேதம் ஒழியாதா? என்று அப்படி எண்ணிய அந்த எண்ணத்தினுடைய எதிரொலி தான் அப்போது ராமானுஜர் படத்தை வெளியிட பாரதிதாசன் முன்வந்தாரே அந்த முயற்சி ஆகும்.

பாரதிதாசன் பெரிய சுயமரியாதைக்காரர் அல்லவா? அவரைப் போய் எப்படி ராமானுஜர் படத்திற்கு வசனம் எழுதச் சொன்னார்கள் என்று கேட்பவர்களுக்கு நான் தருகின்ற ஒரே பதில், இந்தப் பதில்தான். பாரதிதாசன் ராமானுஜரைப் போல் நேரடியாக, பொதுப்படையாக கடவுள் இயக்கத்தை வளர்த்தவர் அல்ல. ஆனால், கடவுளை வைத்து மக்களை பேதப்படுத்துகின்ற மதியீனத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதினார். அப்படி கருதிய பெரும்புலவர்களில், பெருங்கவிஞர்களில் ஒருவர்தான் நம்முடைய பாரதிதாசன். பாரதிதாசனைப் பின்பற்றி நாம் திராவிட முன்னேற்றக் கழகத்திலே கொள்கைகளை இன்றைக்கும் நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட தத்துவ ஞானிகள், அப்படிப்பட்ட பெரும்புலவர்கள், தமிழறிஞர்கள், அந்தப் படத்திலே பார்த்தாலே தெரியும் - என்ன குறை கண்டீர்கள் தமிழிலே?

நல்ல விஷயங்களைச் சொல்லுகின்றவர்கள் அதை சமஸ்கிருதத்திலே ஏன் சொல்ல வேண்டும்? தமிழிலே சொன்னால் நல்ல விஷயம் புரியாதா? எல்லாருக்கும் புரியக் கூடிய மொழி எங்களுக்குத் தமிழ்மொழிதான். அந்தத் தமிழ்மொழியிலே தான் அனைத்து கருத்துகளும் சொல்லப்பட வேண்டும் என்ற ஒரு உன்னதமான கருத்தை பரப்புவதற்காகத்தான் ராமானுஜர் வெளிவந்தார். தற்போது படமாக வருகிறார். அவருடைய கருத்தைப் பின்பற்றுங்கள் என்று நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

ஆனால், ராமானுஜருடைய கருத்தை ஏற்று அவர் வழியில் சமுதாயத்தை சீர்திருத்தி அமைக்க எத்தனை பேர் முன்வருவார்கள் என்று பார்த்தால், மிகச் சிலர்தான் முன்வருவார்கள். அந்தச் சமுதாயப் பணியை ஏற்றுக் கொண்டு, அந்தச் சமுதாயப் பணியை ஏற்பதிலே கிடைக்கின்ற வெற்றியை ஏற்று நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலமாக சமத்துவ சமுதாயம், எல்லோரும் ஓர் குலம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அப்படிப்பட்ட உன்னதமான லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பணியிலே ஈடுபட்டோம்.

என்ன திடீரென்று கருணாநிதி; அவரைப் பாராட்ட இங்கே அழைத்தால், அவர் படத்திற்குப் பிரச்சாரம் செய்கிறாரே என்று யாராவது எண்ணுவீர்களேயானால்; இது படத்திற்காக நான் செய்கின்ற பிரச்சாரம் அல்ல. பகுத்தறிவு பரவ வேண்டும் என்பதற்காக நான் எந்த நேரத்திலும் செய்கின்ற பிரச்சாரங்களிலே இதுவும் ஒன்று என்பதற்காகத்தான் இதைச் சொல்லுகின்றேன். அப்படிப்பட்ட பகுத்தறிவுப் பிரச்சாரத்தை, அப்படிப்பட்ட சமுதாய சீர்திருத்த பிரச்சாரத்தை, ஜாதி மதமற்ற ஒரு உன்னதமான சமத்துவ நிலை தமிழகத்திலே உருவாக வேண்டும் என்ற அந்தப் பிரச்சாரத்தை நீங்கள் செய்ய வேண்டும்.

மத்திய அரசுக்கு எச்சரிக்கை...

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஆரம்பத்திலே அரசியல் ரீதியாக நாமெல்லாம் "மாநில சுயாட்சி" கேட்பவர்கள். நாங்கள் மத்திய அரசுக்கு இணக்கமாக இருப்பவர்கள் அல்ல என்று உரைத்து வெளிவந்த ஒரு கட்சியாக இருந்தாலும் கூட, இன்றைக்கும் சொல்லுகின்றேன் மத்திய அரசு - எங்களை மதிக்கிற வரையில் நாங்கள் அடங்கிப் போவோம். ஆனால் நாங்கள்தான் இமய மலையில் இருந்து கன்னியாகுமரி வரையிலே ஆளப் பிறந்தவர்கள், நீங்களெல்லாம் அடிமைகள்தான் என்று உரைத்தால், நாங்கள் மீண்டும் எங்களுடைய "விடுதலை" முழக்கத்தை எழுப்ப வேண்டியவர்களாக ஆவோம்.

இப்போதும்கூட திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏதோ ஒரு பிரிவினை வாத இயக்கம் என்று தவறாக எண்ணிக்கொண்டு, இந்தப் பிரிவினையை அடக்க நாங்கள் தயார் என்று சொல்லிக் கொண்டு, அதற்குக் கிடைக்கின்ற ஆட்களைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் நடத்த தமிழகத்திலே யாராவது முன்வருவார்களேயானால், அவர்கள் தமிழகத்திலே மாத்திரமல்ல, வடநாட்டிலே கூட அவர்களால் தலையெடுத்து அந்தக் காரியத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியாது என்பதை இன்றைக்குச் சொல்லிக் கொள்கின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு சமுதாய சீர்திருத்த இயக்கமாகத் தோன்றியது. பெரியாரால், அண்ணாவால், அவர்களுக்கு முன்பே நடேசனார் போன்றவர்களால் இந்த இயக்கம் இன்றைக்கு வலுப்பெற்று, 'மனிதனிலே நீயும் மனிதன்; மண்ணன்று, புழு அன்று, பூச்சி அன்று. ஆகவே, மனிதனாக நடப்போம். மனிதனாக நம்மை நடத்த யார் மறுத்தாலும் அவர்களையெல்லாம் வீழ்த்துவோம்' என்ற அந்த உறுதிப்பாட்டோடு, அந்த வீறு கொண்ட தோளோடு நாம் நம்முடைய பணிகளை ஆற்றிட வேண்டும்.

சரியான பதிலடி கொடுப்போம்

குறிப்பாக இளைஞர்களுக்கு நான் விடுக்கின்ற வேண்டுகோள், உங்களுடைய கையிலே இந்த நாடு இருக்கிறது, நீங்கள் கையை விரித்துப் பார்க்காதீர்கள். உங்களுடைய கையிலேதான் நாடு இருக்கிறது. இந்த நாடு நம்முடைய கையிலே இருந்த காரணத்தினால்தான்; மாணவர் போராட்டங்களில், "ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே!" என்றுரைத்து, அன்றைக்கே இந்தியை எதிர்த்து போர்க்குரல் கொடுத்தது மாணவர் இயக்கம் - திராவிடர் இயக்கத்தின் இளைஞர் பட்டாளம்.

அப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கும் வரையில், எந்த மொழியும் நம்மை அடிமைப்படுத்த முடியாது. எந்த மொழியாலும் நம்மைத் தாக்கி அழிக்க முடியாது. அந்த உணர்ச்சியோடு, அந்த வீர சபதத்தோடு நாம் நடைபோட வேண்டும். அதுதான் நம்முடைய வெற்றிக்கு வித்து, வெற்றிக்கு வழிகாட்டி என்று உங்களுக்கு எல்லாம் எடுத்துச் சொல்லி அந்த வெற்றிப் பாதையில் வீறு நடைபோடுவோம்" என்றார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x