Published : 07 Apr 2017 03:59 PM
Last Updated : 07 Apr 2017 03:59 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கடிதம் அளித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் ஏ,ஆறுமுக நயினார் ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து புகார் கடிதம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்தக் கடிதத்தில், ''கடந்த 5-ம் தேதியன்று ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்த மனு ஒன்றை உங்களிடம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினோம். அன்று அதிமுக அம்மாகுழுவினரை குறித்து கொடுத்த அந்த மனுவைத் தொடர்ந்து இன்னும் சில அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

திமுக வேட்பாளருக்காக அவரது கட்சியைச் சார்ந்தவர்கள் நேற்று இரவு முதல் வாக்காளர்களுக்கு தலா ரூபாய் 2,000 பட்டுவாடா செய்து வருவதாக தகவல் வந்திருக்கிறது.

ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியினர் வாக்காளரிடம் அடையாள அட்டைகளின் நகல்களை பெற்றுக்கொண்டு வாக்குக்கு பணம் கொடுப்பதற்காக டோக்கன்களை விநியோகம் செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

கடந்த 5-ம் தேதியன்று திமுகவும், பன்னீர்செல்வம் குழுவினரும், டி.டி.வி. தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக உங்களிடமே மனு கொடுத்ததை நாடறியும். இன்று அந்த இரண்டு குழுவினரும் கூட பணம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கக்கூடிய நடவடிக்கையாகும்.

எனவே, உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு பணப்பட்டுவாடா செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.

டி.டி.வி.தினகரனுக்காகவும், பன்னீர் செல்வம் கோஷ்டி வேட்பாளருக்காகவும், திமுக வேட்பாளருக்காகவும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கும் சூழலில் தேர்தலை ரத்து செய்திட வேண்டும். மேலும், இத்தொகுதிக்கு மீண்டும் நடக்கும் இடைத்தேர்தலில் இந்த வேட்பாளர்கள் போட்டியிட முடியாத அளவிற்கு தகுதி நீக்கம் செய்திட வேண்டும்.

நேர்மையான, பாரபட்சமற்ற, ஜனநாயகபூர்வமான தேர்தலை நடத்தும் பொருட்டு தேர்தல் கமிஷன் உடனடியாகத் தலையிட்டு மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என ஜி.ராமகிருஷ்ணன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x