

விழுப்புரத்தில் நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டுக்கு 24 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தில் பிப்ரவரி 2-ம் தேதி மாநாடு நடத்துவதாக தேமுதிக அறிவித்திருந்தது. இம் மாநாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டதால் இம் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்பட்டது. இம் மாநாட் டுக்கு அனுமதி கோரி கடந்த 11-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலரும், தேமுதிக எம்எல்ஏவுமான எல்.வெங்கடேசன் மனு அளித்தார்.
எனினும், மாநாட்டுக்கு போலீஸாரின் அனுமதி கிடைப் பதில் தாமதம் ஏற்பட்டது. இந் நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் மாநாட்டுக்கு போலீஸார் அனுமதி அளித்தனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி பாண்டியன் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலைகளில் பேனர், விளம்பரங்கள் வைக்கக் கூடாது. இரவு 10 மணிக்குள் மாநாட்டை முடிக்கவேண்டும். சாலைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது, போக்குவரத்து இடையூறான வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பன உள்ளிட்ட 24 நிபந்தனைகளுடன் தேமுதிக மாநாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று டிஎஸ்பி பாண்டியன் தெரிவித்தார்.
கடைசி நேரத்தில் அனுமதி அளிக்க காரணம் என விசாரித்த போது, முதலிலேயே அனுமதி அளித்திருந்தால் தமிழகமெங்கும் பேனர்களும், செய்தித் தாள்களில் விளம்பரங்களும் கொடுக்கப்பட்டு கட்சிக்கும், மாநாட்டுக்கும் அதிக விளம்பரம் கிடைத்திருக்கும். அதைத் தவிர்க்கவே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக அரசுதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படியும், அப்படி வைக்கப்படும் பேனர்களை வருவாய்த் துறையினர் உதவியுடன் உடனடியாக அகற்றும்படியும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் சில இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேமுதிக மாநாட்டுக் காக பேனர் வைக்க முயன்ற 11 பேரை உளுந்தூர்பேட்டை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களை விடுவிக்கக் கோரி எடைக்கல் காவல் நிலையம் முன்பு, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேமுதிகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அனைவரையும் போலீஸார் விடுவித்தனர்.