Published : 06 Feb 2017 10:37 AM
Last Updated : 06 Feb 2017 10:37 AM

உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் சாதனை படைக்கலாம்: ஈரோட்டில் நடைபெற்ற ‘தி இந்து - பெண் இன்று’ மகளிர் திருவிழாவில் அறிவுரை

உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையில் சாதனை உச்சத்தை அடைய முடியும் என்பது அனுபவப்பூர்வ உண்மை என ஈரோட்டில் நடைபெற்ற ‘தி இந்து - பெண் இன்று’மகளிர் திருவிழாவில் சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நான்காம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வாசகர் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று ‘தி இந்து’ நாளிதழின் இணைப்பிதழாக ஞாயிறுதோறும் வெளியாகும் ‘பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நெய்வேலி, மதுரை, திருச்சியைத் தொடர்ந்து ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் உள்ள கஸ்தூரிபா அரங்கில் நேற்று மகளிர் திருவிழா நடைபெற்றது.

‘தி இந்து’ நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் தலைமை வகித் தார். இணைப்பிதழ் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் வரவேற்று பேசினார். சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், வேளாளர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டி.கமலவேணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மன அழுத்தத்தை சமாளித்தல் குறித்து, மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி பங்கேற்ற ஆலோசனை மற்றும் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடந்தது. மனரீதி யான பிரச்சினைகள் குறித்து வாசகியர் கேள்விக்கு, அவர் பதில் அளித்தார்.

விழாவில் சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி பேசியதாவது:

வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் உலகளாவிய விஷயங்களை பெற்றவராவர். சிறந்த நூல்களை யும், பத்திரிகைகளையும் தேடி கண்டுபிடித்து படிப்பது நீங்கள் நல்ல நட்பை பெற்றதற்கு சமம். என் வாழ்வில் ‘வாசிப்பையே சுவாசிப்பாய்’ கொண்டதால்தான் இந்த வெற்றி மகுடம் எனக்கு கிடைத்துள்ளது.

பெண்கள் மகளாய், சகோதரி யாய், மனைவியாய், மருமகளாய், மாமியாராய் பல பரிணாமங்களை வாழ்வில் அடைகின்றனர். குடும்பப் பொறுப்பு, கடமை உணர்வு, தொழில் முயற்சி என திட்டமிடல் மூலம் வெற்றியை ருசிக்கலாம். உழைப்புக்கு முக்கி யத்துவம் கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையில் சாதனை உச்சத்தை அடைய முடியும்.

பிறக்கும்போது எதையும் கொண்டு வராத நாம்; இறக்கும் போது எதையும் எடுத்துச் செல்ல முடியாத நாம்; சமுதாயத்தில் இருந்து பெற்றதை, இச்சமூகத் துக்கு கொடுத்து உதவுதல் என்ற கோட்பாட்டை வகுத்து வாழ்தல் சிறப்பு.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் பெண்களின் பன்முகத்தை மட்டு மின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கான காலக்கண்ணாடி யாக விளங்கும் நல்ல பத்திரிகையாக விளங்குவதை கண்டு நான் வியப்பில் ஆழ்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி பேசும்போது, “14 வயது பள்ளி மாணவர் முதல் 74 வயது முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் உடல்ரீதியாக, மனரீதியாக ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளாகி யுள்ளனர். மனதுக்குப் பிடித்த காரியங்களை, முழு ஈடுபாட்டுடன் செய்வதன் மூலம் மனத் தெளிவு ஏற்படுகிறது. ஒருவர் பிடிக்காத காரியத்தை செய்வதன் மூலமோ, கட்டாயப்படுத்துவதாலோ எல்லா வித மன அழுத்தத்துக்கும் காரணியாகிறார். மன அழுத்தம் உண்டாகும்போது, பிடித்த விஷயத் தில் கவனம் செலுத்துவதாலும், பிடித்தமானதை கற்பனை செய்வ தாலும் மன சோர்வு, மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். மூச்சுப் பயிற்சி, செல்லப் பிராணி வளர்ப்பு, தியானம், புத்தக வாசிப்பு போன்ற பழக்கத்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்” என்றார்.

விழாவில் கல்லூரி முதல்வர் டி.கமலவேணி பேசும்போது, “பெண் என்றால் அழகு சார்ந்தவள், அழகியல் மட்டுமே அவளை வசீகரிக்கும் என்பதைத் தாண்டி, பெண்ணால் பல விஷயங்களை சிந்திக்க, சாதிக்க முடியும் என்று ‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ உணர்த்தி வருகிறது. ஆண், பெண் சம உணர்வை ஏற்படுத்தும் பல விஷயங்கள் ‘பெண் இன்று’ இதழில் இருக்கிறது. புதுமைப் பெண் என்றால் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டும் என்பது அர்த்தமல்ல, குடும்பக் கடமை களையும், தொழிலையும், சமுதாய கடமைகளையும் சமமாக பாவிக்கும் மனநிலை வேண்டும். அந்தப் பணியை ‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ சிறப்பாக செய்து வருகிறது” என்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் பேசும்போது, ‘‘தி இந்து தமிழ் நாளிதழை படித்தால் தமிழகம், இந்தியா, உலக நடப்புகள் என ஒவ்வொரு நாளின் வரலாற்றையும் அறிந்துகொள்ள முடியும். ‘தி இந்து’ நாளிதழை சேமித்து வைத்தால் 100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம், இந்தியா, உலகம் என அனைத்து வரலாறுகளையும் அறிந்துகொள்ள முடியும். ஜல்லிக் கட்டு போராட்டம் மட்டுமல்ல, சென்னையில் கடலில் கொட்டி யுள்ள எண்ணெயை அகற்றும் பணியிலும் பெண்கள் பங்கேற்றுள் ளனர் என்ற செய்தியை ‘தி இந்து’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. அப்படிப்பட்ட பெண்ணினம் தமிழகத்தில் மென்மேலும் உயர வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘தி இந்து’ நாளிதழ் தொடர்ந்து பணியாற்றி வருகிறது” என்றார்.

கலை நிகழ்ச்சிகள்

விழாவில், ஈரோடு கிண்கிணி நடனப் பள்ளி மாணவிகள் திருக்குறள் பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடிய அசத்தலான நடன நிகழ்ச்சியை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். தருமபுரி பாரதி கலைக் குழுவின் தப்பாட்டம், கரகாட்டம் என பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக நடந்த கிராமிய நடனத்தை பார்வை யாளர்கள் ரசித்துப் பார்த்தனர்.

வேளாளர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி தமிழ் துறை விரிவுரையாளர் பி.தனலட்சுமி தலைமையில் நடந்த ‘சுயசார்புடன் இருக்க கல்வி கைகொடுக்கிறதா இல்லையா?’ என்ற தலைப்பிலான பேச்சரங்கத்தில், ‘கல்வி கை கொடுக்கிறது’ என்ற தலைப்பில் த.ஷண்முகப்பிரியாவும், ‘கை கொடுக்கவில்லை’ என்ற தலைப்பில் ப.நந்தினியும் பேசினர். ஈரோடு புத்தாஸ் குங்ஃபூ - காரத்தே, யோகா சிலம்பம் தற்காப்பு கலை பள்ளியின் மாணவிகள் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர். விழாவின் காலை நிகழ்ச்சிகளை தமிழ்துறை விரிவுரையாளர் ஹேமலதா தொகுத்து வழங்கினார்.

விளையாட்டு போட்டிகள்

விழாவையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளில் பால் பாஸிங், ஞாபகசக்தி, வார்த்தை விளையாட்டு, பாட்டுப் போட்டி, கோலி விளையாட்டு, ரப்பர்பேண்ட் மாலை, பென்சில் மீது நாணயம் அடுக்குதல், கயிறு முடிச்சு போடுதல், பொட்டு ஒட்டும் போட்டி உள்ளிட்டவற்றில் வாசகிகள் உற்சாகத்துடன் பங்கேற்று பரிசுகளை வென்றனர். இந்த நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகை தேவி கிருபா தொகுத்து வழங்கினார். ‘தி இந்து’ மகளிர் திருவிழாவில், திடீர் போட்டிகள், குலுக்கல் பம்பர் பரிசுகளை பெற்று பரிசு மழையில் மூழ்கி வாசகியர்கள் குதூகலமடைந்தனர்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட இவ்விழாவை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுடன் இணைந்து லலிதா ஜூவல்லரி, சென்னை சில்க்ஸ், சக்தி மசாலா, நாட்ரா கைக்குத்தல் அரிசி, ஹரிபாலா மால், பொன்மணி வெட்கிரைண்டர், ஹெச் டூ ஹெச், ஸ்பிக்டெக்ஸ், டிஸ்கவுன்ட் வாசிங் பவுடர், சுதா மருத்துவமனை, லோட்டஸ் டிவிஎஸ், அம்பாள் ஆட்டோ, மில்கா வொண்டர்கேக், ஏ -1 சிப்ஸ், வி.வி.நேஷனல் சேர்ஸ், எஸ்.கே.எம்.சிகிச்சையாலயா, டேஸ்டி மசாலா, சாம்சன் பிட்னஸ் சென்டர், ராயல் செட்டிநாடு ஹோட்டல்,  சுவாநிதி கலெக் சன்ஸ், ஆதிரா வெள்ளி மாளிகை, கோகினூர் ஹோட்டல், ஆர்சிஎன் டிவி ஆகியவை இணைந்து வழங்கின.

அடையாளத்தை உறுதிப்படுத்தும் இதழ்

விழாவில் ‘தி இந்து’ இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் பேசும்போது, “ஜல்லிக்கட்டு போராட்டம் பெண்கள் பங்கேற்பு இல்லாமல் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்க முடியாது. ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே சம்பளம் கிடையாது. ஒரே சாதனையை பெண்ணும், ஆணும் செய்திருந்தால், அதில் பெண்ணுக்கு உரிய அங்கீகாரம் கிடையாது. இந்த பின்னணியில்தான் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ‘தி இந்து’ நாளிதழ் ‘பெண் இன்று’ என தனி இணைப்பிதழை வெளியிட்டு வருகிறது.

பெண் என்றால் சமையல், தாய்மை, அழகு இந்த 3 விஷயங்களில் அழகுபடுத்தப்படுகிறது. ‘பெண் இன்று’ இந்த 3 விஷயங்களை மறுக்கவில்லை. பெண்களின் பன்முகத்தன்மை, அவர்களது ஒவ்வொரு அடையாளமும் முக்கியம். எதையும் எடுக்கவோ மறுக்கவோ பொது சமூகத்துக்கு அதிகாரம் கிடையாது. அதை தீர்மானிப்பவர்கள் பெண்கள். இந்த பொறுப்புணர்வோடு ‘பெண் இன்று’ இணைப்பிதழை வடிவமைத்துள்ளோம். ‘பெண் இன்று’ என ஒரு பகுதியில் மட்டுமின்றி நாளிதழின் அனைத்துப் பகுதியிலும் பெண்களின் கண்ணியத்தை புண்படுத்தும் வகையில் ஒரு வார்த்தைகூட இடம்பெற்றிருக்காது. அதுபோல் நாளிதழின் அனைத்துப் பக்கங்களிலும் பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், அங்கீகாரத்தை உரிய முறையில் காக்கும் கடமையில் ‘தி இந்து’ நாளிதழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x