

அருவிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என தேனி மாவட்ட மலைகிராம மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்பில் பெரியாறு அணை தண்ணீர் மூலம் நீர் மின் உற்பத்தியும், ஆண்டிபட்டி, வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது. இந்த மின்சாரம், உள்ளூர் தேவை போக, மற்ற மாவட்டங்களுக்கு மின்கம்பிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இதற்கிடையில் ஹைவேவிஸ் மலை, அகமலையைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் இன்னமும் மின் வசதியின்றி ஏராளமான மக்கள் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இக்கிராம மக்களுக்கு வனப்பகுதிகள் வழியாக மின் வயர்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மின்சாரம் வழங்க மாற்று ஏற்பாடாக அருவிகளில் இருந்து விழும் தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்க, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.
இதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் எனர்ஜி டெவலப்மெண்ட் துறையினர் தேனி மாவட்டத்தில் உள்ள சின்ன சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சாம்பலாறு அருவி உள்ளிட்ட சில அருவிகளில் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்குப்பின், இந்த திட்டத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாகத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மலைகிராம மக்கள் சிலர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் பல மணி நேரம் மின்தடை இருந்தபோது, அருவிகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கிடையில், சில மலைகிராமங்களில் சோலார் மூலம் மின்வசதி செய்யப்பட்டது. ஆனால் பலத்த காற்று, மழைக்கு பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சோலார் பேனல்கள் பழுதடைந்து விட்டன. இந்த நிலையில் மின் தட்டுப்பாடு நீங்கியதால், இந்தத் திட்டத்தினை செயல்படுத்தாமல் 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர்.
திட்டம் நிறைவேற்றப்பட்டால் வனப் பகுதியில், பல தலைமுறைகளாக மின்வசதி இல்லாமல் வாழும் எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மெண்ட் செயற்பொறியாளர் ஒருவரி டம் கேட்டபோது, மழைபெய்யும் காலங்களில் மட்டுமே அருவிகளில் நீர்வரத்து உள்ளது. மற்ற காலங்களில் நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.