

டாக்டர் டிஜிஎஸ் தினகரன் சாலையில் கார் மோதி வட மாநில இளைஞர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராபின் (27), ஹமீது (28), காக்கையன் (19), பெஞ்சமின் (28). இவர்கள் அனைவரும் எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வருகின் றனர்.
இரவு பணியை முடித்துவிட்டு நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் பட்டினப்பாக்கம் அருகே உள்ள டாக்டர் டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, பட்டினப்பாக்கத்தில் இருந்து அடையார் நோக்கி கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. நீதிபதிகள் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகள் உள்ள பொதிகை வளாகம் அருகே செல்லும்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
கண் இமைக்கும் நேரத்துக்குள் நடைபாதையில் சென்று கொண்டிருந்த 4 பேர் மீதும் மோதியது. தொடர்ந்து வேகம் குறையாமல் பொதிகை வளாகத்தில் மோதியது. இதில், மதில் சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. காரும் சேதம் அடைந்தது.
தகவல் அறிந்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அடையார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் கூறும்போது, “விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது விருத்தாசலத்தைச் சேர்ந்த ஐயப்பன் (30) என்பது தெரியவந்தது. இவர் குடிபோதை யில் இருந்துள்ளார். மேலும், அருகில் இருந்த அவரது நண்பர் வேலாயுதமும் (39) போதையில் இருந்துள்ளார். இருவரையும் கைது செய்துள்ளோம்” என்றனர்.