தமிழக மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்ட சம்பவம்: நடவடிக்கை கோரி பிரதமர் அலுவலகத்தில் அதிமுக எம்பிக்கள் கடிதம்

தமிழக மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்ட சம்பவம்: நடவடிக்கை கோரி பிரதமர் அலுவலகத்தில் அதிமுக எம்பிக்கள் கடிதம்
Updated on
1 min read

தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்பிக்கள் பிரதமர் அலுவலகத்தில் கடிதம் அளித்தனர்.

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் நிர்பேந்தர் மிஸ்ராவிடம் அதிமுக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

இதுதொடர்பாக, அதிமுக எம்பிக்களான துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, பி.வேணுகோபால் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''தமிழக கடல் எல்லைப் பகுதியான தனுஷ்கோடி, கச்சத்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். மேலும், நான்கு மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் சுமார் 50 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளது. இதனால் மீனவர்களின் தினசரி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பலமுறை எழுப்பியும் இதுவரை எவ்வித பலனும் ஏற்படவில்லை. மேலும், இதுதொடர்பாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். எனவே இனியும் காலம் தாமதிக்காமல் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கண்டு இலங்கை கடற்படையின் அராஜக செயலை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in