

அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடி பால்கனியில் விளையாடியபோது, தவறி விழுந்த 2 சிறுவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கொத்தவால்சாவடி தாத்தா முத்தியப்பன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் வசிப்பவர் ரவி (32). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மிருதுளா. இவர்களின் மூத்த மகன் தார்யா (6), தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பும், இரண்டாவது மகன் பாச்சால் (4), யுகேஜியும் படிக்கின்றனர். சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், வீட்டின் பால்கனியில் சிறுவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். மிருதுளா, வீட்டுக்குள் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பால்கனியின் ஓரத்தில் இருந்த பெரிய ஓட்டை வழியாக இருவரும் தவறி கீழே விழுந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த குடியிருப்பு வாசிகள், ரத்த வெள்ளத்தில் சிறுவர்கள் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தங்கசாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து இருவரும் மேல் சிகிச்சைக்காக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
‘ஓட்டை’ பற்றி விசாரணை
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து குழந்தைகள் தவறிதான் கீழே விழுந்துள்ளன. குழந்தைகளின் தலை, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்து இல்லை. மற்றொரு குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பால்கனியில் எதற்காக ஓட்டை வைத்துள்ளனர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. விசாரணை முடிவில்தான், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.