Last Updated : 14 Jan, 2014 10:56 AM

 

Published : 14 Jan 2014 10:56 AM
Last Updated : 14 Jan 2014 10:56 AM

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியது மதிமுக

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் ஈரோடு கிழக்கு, மேற்கு, காங்கேயம், தாராபுரம், மொடக்குறிச்சி, குமாரபாளையம் ஆகிய ஆறு சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. தேர்தல் கூட்டணிகள் இறுதி செய்யப்படும் முன்பாகவே, ஈரோடு தொகுதியின் தற்போதைய எம்.பி.யான கணேசமூர்த்தியை வேட்பாளராக முடிவுசெய்து ம.தி.மு.க. பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த ஆறு மாதமாக அக்கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அனைத்து ஒன்றியங்களிலும் முதல்கட்டப் பிரச்சாரத்தை முடித்துள்ளார். அதற்கேற்ப, கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தைகளை இரு கட்சிகளும் துவங்கியுள்ளன.

விருப்ப மனு

அ.தி.மு.க.வைப் பொறுத்த வரை முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, துணை மேயர் கே.சி.பழனிசாமி, மண்டலத் தலைவர் மனோகரன், வக்கீல் துரை சக்திவேல், இளைஞர் பாசறை பழனிவேல், மணிமேகலை விஸ்வநாதன் என ஏராளமானவர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜாதி வாக்கு

அ.தி.மு.க.வில் இந்தமுறை பிரபலமான, ஜாதி வாக்கு வங்கியைக் கொண்ட, தாராளமாக செலவழிக்கக் கூடியவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி. பதவி வகித்த அனுபவமுள்ள கே.வி.ராமலிங்கம் அல்லது பி.ஜி.நாராயணன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கட்சித் தலைமையால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையனுக்கு வாய்ப்பு கொடுக்கவும் திட்டமுள்ளதாக கூறுகிறது அ.தி.மு.க. வட்டாரம்.

சுப்புலட்சுமியின் விருப்பம்

தி.மு.க.வில் சுப்புலட்சுமி ஜெகதீசன், முத்துசாமி, முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், எல்லப்பாளையம் சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர் செல்லப்பொன்னி மனோகரன் உள்ளிட்டோரில் ஒருவர் வேட்பாளராக வாய்ப் புள்ளது. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவுக்கும், முத்துசாமிக்கும் இடையே நடக்கும் கோஷ்டி சண்டையில், தலைமையின் ஆதரவு பெற்ற சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்த முறை போட்டியிடலாம் என்கின்றனர் தி.மு.க.வினர்.

தே.மு.தி.க.-காங். நிலை என்ன?

எந்தக் கூட்டணியில் சேரும் என கணிக்க முடியாத நிலையில் உள்ள தே.மு.தி.க.,வில் அக்கட்சி மாவட்டச் செயலாளர் இமயம் சிவக்குமார் மட்டுமே வேட்பாளர் போட்டியில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் யுவராஜா, சிதம்பரத்தின் ஆதரவாளர் மக்கள் ராஜன், விடியல் சேகர் என பெரும் பட்டியல் வாசிக்கப்பட்டாலும் கூட்டணி அமைவதைப் பொறுத்தே இந்த விருப்ப பட்டியல் கூடவும், குறையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ஈரோடு தேர்தல் களத்தில் ம.தி.மு.க. மட்டும் தேர்தல் பணியில் ஒரு சுற்று முன்னேறிய நிலையில், மற்ற கட்சிகள் கூட்டணிக்காகவும் தலைமையின் முடிவுக்காகவும் காத்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x