

சென்னையில் மெட்ரோ ரயில் முதல்கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை (10 கிலோ மீட்டர்) மட்டுமே இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திடீரென முடிவு செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.14,600 கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடக்கின்றன.
முதலாவது வழித்தடம், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை (23 கிலோ மீட்டர்) செல்கிறது. இரண்டாவது வழித்தடம், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை (22 கிலோ மீட்டர்) செல்கிறது.
முதல்கட்ட பயணத்தில்மாற்றம்
முதல்கட்டமாக கோயம்பேடு - பரங்கிமலை இடையே 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மெட்ரோ ரயில் நிலையம், எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் ஆகியவற்றுடன் பரங்கிமலை ரயில் நிலையம் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. தற்போது, இந்த நிலையம் வழியாக தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் (எம்.ஆர்.டி.எஸ்.) பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட உள்ளது. இன்னும் 600 மீ்ட்டர் நீளத்துக்கு தண்டவாளம் அமைக்கும் பணி மட்டுமே பாக்கி உள்ளது. அதுபோல, மெட்ரோ ரயிலின் 2-வது வழித்தடம் சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை அமைக்கப்படுகிறது. இதன்படி எக்ஸ்பிரஸ், மின்சார ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் என நான்கு வகை ரயில்கள் இயக்கப்படும் நிலையமாக பரங்கிமலை இருக்கும்.
பரங்கிமலையில் இருந்து தென்மாவட்ட ரயில்கள்
கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர், தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரை, வண்ணாரப்பேட்டை என அனைத்துப் பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
இதனால், தென்மாவட்ட ரயில்களை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து இயக்குவது குறித்து ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக அதிநவீன வசதிகளுடன் மிகப்பிரமாண்டமான ரயில் நிலையத்தைக் கட்டி முடிக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்.
விரைவில் சோதனை ஓட்டம்
அப்படி தாமதமானால், முதல்கட்டமாக மெட்ரோ ரயிலை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுத்த ஆண்டு ஜூன் முதல் இயக்குவது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக மே மாதம் சோதனை ஓட்டம் நடத்தி, ஒப்புதல் சான்றிளிக்குமாறு தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மிட்டலை கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கிடையே, கோயம்பேட்டில் 800 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள டெஸ்ட் டிராக்கில், தானியங்கி சிக்னல் பொருத்தப்பட்டு சோதித்துப் பார்க்கப்பட்டதால், சில நாட்களில் சோதனை ஓட்டம் நடக்கும் என தெரிகிறது. இதற்காக பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.32 கோடி மதிப்புள்ள 4 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரெயில் தயார் நிலையில் உள்ளது.