Published : 12 Mar 2016 04:47 PM
Last Updated : 12 Mar 2016 04:47 PM

தமிழக தேர்தலில் 6 முனை போட்டியால் யாருக்கு லாபம்?

சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து சந்திக்கப் போகிறேன் என்ற விஜயகாந்தின் ஒற்றை அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் கூட்டணி கணக்குகளில் தடுமாற்றம், சிலருக்கு ஏமாற்றம், சிலருக்கு ஆரவாரம் என கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

விஜயகாந்தின் அந்த அறிவிப்பு ஒரு விஷயத்தை தமிழக தேர்தல் களத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதாவது 2016 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் 6 முனை போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இத்தகைய சூழலில் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செலுத்தும் இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் இந்த 6 முனை போட்டியால் என்ன நேரும். 6 முனை போட்டியால் யாருக்கு அதிக லாபம் என்பதே தர்க்க ரீதியாக எழும் கேள்வி.

இந்த 6 முனை போட்டியின் சாதக பாதகங்களை அலச கடந்த 2006, 2011 சட்டப்பேரவை தேர்தல் போக்கினை பின்னோக்கிப் பார்ப்பது அவசியம்.

2006 மற்றும் 2011 சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக, திமுக வாக்குவங்கியை தவிர்த்துவிட்டு சிறிய கட்சிகள் (தேமுதிக, மதிமுக, விசிக, பாமக, சிபிஐ, சிபிஎம், பாஜக, காங்கிரஸ்) பெற்ற மொத்த வாக்கு சதவீதம் முறையே 39.1%, 36.3% ஆகும்.

இப்போது ஏற்பட்டுள்ள கூட்டணி மாற்றத்தின் அடிப்படையில் காங்கிரஸை இந்தப் பட்டியலில் இருந்து நீக்கினால் அதிமுக, திமுக நீங்கலான பிற சிறு கட்சிகளின் வாக்குவங்கு 2006-ல் 30.4%, 2011-ல் 27% என்ற அளவில் இருக்கிறது.

இந்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும்முன் இரண்டு முக்கிய கோணங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். முதலாவதாக இந்த சிறிய கட்சிகள் அனைத்துமே கடந்த இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணியில் இருந்திருக்கின்றன. இதனால், கூட்டணி பலத்தை இக்கட்சிகள் அறுவடை செய்து தங்கள் வாக்கு வங்கியை வலுப்படுத்தியிருக்கலாம்.

இரண்டாவதாக, கடந்த இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும் அதிமுகவுடன் ஒப்பிடும்போது திமுக குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிட்டிருக்கிறது. இதனால், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற சிறிய கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட்டு தங்கள் பலத்தை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

வாக்குவங்கி வித்தியாசம்:

2006, 2011 சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக, திமுக இடையேயான வாக்கு வங்கி வித்தியாசம் முறையே 6.1% மற்றும் 16 சதவீதம். இந்த புள்ளிவிவரம் அதிமுகவுக்கு சாதகமான போக்கினை சுட்டிக்காட்டினாலும், திமுக தரப்பினரோ 2006 தேர்தலில் அதிமுகவைவிட தாங்கள் 52 தொகுதிகளில் குறைவாகவும், 2011-ல் அதிமுகவைவிட 41 தொகுதிகள் குறைவாகவும் தாங்கள் போட்டியிட்டதாலேயே வாக்குவங்கியில் பெரிய அளவில் வித்தியாசம் தெரிவதாகக் கூறுகின்றனர்.

இத்தகைய சூழலில் அதிமுகவின் வலுவான வாக்குவங்கியை அசைத்துப் பார்க்க தமிழக மக்கள் அதிமுகவுக்கு எதிராக நிலவும் எதிர்ப்பலைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு ஏற்பட்டுள்ள்து.

வாக்கு வங்கி

கட்சி

2006 தேர்தல்

2011 தேர்தல்

அதிமுக

32.6%

38.4%

திமுக

26.5%

22.4%



தேமுதிக முடிவு குறித்து தேர்தல் ஆய்வாளர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறும்போது, "விஜயகாந்தின் முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவது திமுகவே. நடுநிலை வாக்காளர்களுக்கான வாய்ப்பு அதிகரித்து வரும் வேளையில் திமுகவுக்கு இது பின்னடைவை ஏற்படுத்து.

ஒருவேளை தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோக்க முடிவு செய்தால், நடுநிலை வாக்காளர்களை அந்தக் கூட்டணி பெருமளவில் ஈர்க்கும். இது திமுகவுக்கு மேலும் பலத்த பின்னடைவை ஏற்படுத்தும். தமிழக தேர்தலை பொருத்தவரை எதிர்ப்பலைகளைவிட அரசியல் கூட்டணி கணக்குகளே முடிவுகளை நிர்ணயித்திருக்கின்றன" என்றார்.

அதிமுக, திமுக கூட்டணியில் சிறிய கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்:



கட்சி

2006 தேர்தல்

2011 தேர்தல்

அதிமுக

52

74

திமுக

104

115



சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் மணிவண்ணன் கூறும்போது, "மாநிலத்தின் பெரிய கட்சி என்றளவில் இப்போதைய சூழலில் அதிமுகவுக்கே வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இதை எதிர்கொள்வது திமுகவுக்கு மிகப் பெரிய சவால். வடமாவட்டங்களில் பாமக, விசிகவுக்குள்ள வாக்கு பலத்தை அங்கீகரித்து அவர்களை ஆதரிப்பது எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பதற்கு உதவியாக இருக்கும்" என்றார்.

கூட்டணி கணக்குகள் எப்படி மாறினாலும், அதிமுக, திமுக கட்சிகளுக்கென்று இருக்கும் வாக்கு வங்கி பலத்தை அசைத்துப் பார்க்க முயல்வது அவ்வளவு லகுவான காரியம் இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x