

திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிருடன் இருக்கும்போதே அவரை அமரர் என்று குறிப்பிட்டுப் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் திருச்சி மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவிடம் புகார் அளித்தனர். கடந்த சனிக்கிழமை திருச்சியில் புத்தூர் 4 ரோட்டில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் வாஜ்பாய் என்று குறிப்பிட்டார். இது குறித்து ப.சிதம்பரம் இதுவரை வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கவில்லை. அதனால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.கவினர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பொறியாளர் சுப்பிரமணியம், "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து ப.சிதம்பரம் பேசியுள்ளது அறியாமையால் அல்ல, அவருடைய அகங்காரத்தால். இது பா.ஜ.க தொண்டர்களின் மனதைக் காயப்படுத்தியிருக்கிறது. பொறுப்பற்ற முறையில் பேசியதற்காக அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். மேலும் இதற்காக ப.சிதம்பரம் மன்னிப்புக் கேட்காவிட்டால் பா.ஜ.க. நாடு தழுவிய போராட்டம் நடத்தும் என்றார்.