மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு

மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு
Updated on
1 min read

கொழும்பில் இன்று (செவ்வாய்க் கிழமை) நடை பெற இருந்த இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஜனவரி 27-ம் தேதி சென்னையில் மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தமிழக மீனவர் களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக். நீரிணைப்பு பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லையில் பாரபட்சமின்றி இருதரப்பும் நல்லிணக்கத்துடன் மீன்பிடிப்பதற்கான உரிமையை வலியுறுத்துதல், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு, படகுகளைப் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை கைவிடுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப் பட்டது.

இதையடுத்து இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை மார்ச் 13-ம் தேதி கொழும்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 172 மீனவர்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து மார்ச் 25ம் தேதி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை தமிழக மீனவர்கள் 74 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

இவர்களை விடுதலை செய்தால் மட்டுமே திட்டமிட்டபடி கொழும் பில் 25-ம் தேதி இருநாட்டு மீனவர் கள் பேச்சுவார்த்தை நடைபெறும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக மீனவப் பிரதிநிதி ஒருவர் எமது செய்தியாளரிடம் கூறியதாவது:

இன்று (மார்ச் 25) நடத்த திட்டமிட்டிருந்த இலங்கை-இந்திய மீனவர்கள் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக இலங்கை மீனவப் பிரதிநிதிகள் கொழும்பில் முகாமிட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் இருந்து மீனவப் பிரதிநிதிகள் கொழும்பு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in