

முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டை ஜீவரத்தினம் சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய பண்ணை பசுமை கடை விரைவில் திறக்கப்பட உள்ளது.
நகர்ப்புறங்களில் காய்கறி விலையை கட்டுக்குள் வைக்க வும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும் கூட்டுறவுத்துறை சார்பில் கடந்த 2013-ல் சென்னையில் பண்ணை பசுமை கடைகள் திறக்கப்பட்டன. தற்போது சென்னையில் 2 நகரும் கடைகள் உட்பட 72 காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இதுவரை 16 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் கூட்டுறவுத்துறை சார்பில் 106 அம்மா மருந்தகங் கள் உட்பட 294 மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் இதுவரை ரூ.350 கோடிக்கு மேல், 15 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில், அனைத்து கடைகளுக்கும் முன்மாதிரியாக இருக்கும் வகையில், பண்ணை பசுமை காய்கறி கடை மற்றும் மருந் துக் கடைகள் ஆகியவை இணைந்த கடை ஒன்றை திறக்க கூட்டுறவுத்துறை திட்ட மிட்டுள்ளது. இதற்கு மாநகராட் சிக்கு சொந்தமான இடம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை மண்டலம், 43-வது வார்டில், ஜீவரத்தினம் சாலையில் சுமார் 800 சதுரடி பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பாழடைந்த கழிவறை கட்டிடம் ஒன்று இருந்தது. அதை பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. அது சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த கழிவறையை மன்றத்தின் ஒப்புதல் பெற்று இடிக்கப்பட்டு, அங்கு புதிய கட்டிடம் கட் டப்பட்டுள்ளது. அதில் கூட்டு றவுத்துறை சார்பில் பண்ணை பசுமை காய்கறி கடை மற்றும் மருந்தகம் திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கடைகள் தனியார் காய்கறி கடைகளுக்கு இணையாக, உட்புற தோற்றம் மக்களைக் கவரும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு, ஏசி வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடையின் முன் 20 இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட மும் உள்ளது. சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடை களிலேயே, இது முன்மாதிரி கடையாக திகழும் என்றார்.
இதுகுறித்து ஜீவரத்தினம் சாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, ‘‘கழிவறை இருந்த இடத்துக்கு எதிரே மீன் மார்க்கெட் உள்ளது. ஆனால் அப்பகுதியில் காய்கறி மார்க்கெட் இல்லாமல் இருந் தது. இதனால் பொதுமக்கள் காய்கறி வாங்க சிரமப்பட்டு வருகின்றனர். எங்கள் சிரமத்தை அறிந்து, முதல்வர் இங்கு பண்ணை பசுமை கடை மற்றும் மருந்தகத்தை திறக்க நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.