இலங்கை மீனவர்கள் 12 பேரிடம் விசாரணை - 2 மீன்பிடி படகுகளும் பறிமுதல்

இலங்கை மீனவர்கள் 12 பேரிடம் விசாரணை - 2 மீன்பிடி படகுகளும் பறிமுதல்
Updated on
1 min read

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 12 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். ராமநாதபுரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி நிலையத்துக்கு சொந்தமான `வைபவ்’ என்ற ரோந்து படகில் கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.

அப்போது கன்னியாகுமரியில் இருந்து தென் கிழக்கே 110 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியில் நின்ற இரு இலங்கை மீன்பிடிப் படகுகளை கடலோர காவல் படையினர் கண்டனர். அவ்விரு படகுகளில் அதில் இருந்த 12 சிங்கள மீனவர்களை கைது செய்தனர். படகுகளில் இருந்த 5,000 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கை தொடுவாவா பகுதியை சேர்ந்த அவர்கள் 12 பேரும், சடேவ் புத்தா, ரங்கா புத்தா என்ற அந்த இரு படகிலும் மீன்பிடிக்க வந்திருந்தனர். தொடுவாவா பகுதியை சேர்ந்த பி.என். பெர்னாண்டோ, சில்வா, திசேரா, பெரைரா, என்.ஏ. பெர்னாண்டோ, திணேஷ், ஹடுரங்கா பெர்னாண்டோ, எம்.எச். பெரைரா, ரங்கா பெரைரா, ரசந்தன், லசிடோசல், திமிரா ஆகிய 12 பேரையும், அவர்களது இரு படகுகளையும், கடலோர காவல் படையினர் நேற்று காலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவர்கள் தருவை குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், தூத்துக்குடி தெர்மல்நகர் போலீஸார், கியூ பிரிவு போலீஸார், ஐ.பி. போலீஸார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே இலங்கையின் நீர்க்கொழும்பு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க வந்ததோம். சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடித்துவிட்டு ஊர் திரும்பும் வழியில் இந்திய கடல் எல்லைக்குள் வந்து தான் செல்ல வேண்டும். அதற்காக தான் இந்திய கடல் எல்லைக்குள் வந்தோம். அப்போது கடலோர காவல் படையினர் பிடித்துவிட்டனர் என அவர்கள் தெரிவித்தனர்.

விசாரணைக்கு பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அவர்கள் ராமநாதபுரத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in