பலியான மீனவர் குடும்பத்துக்கு இலங்கையிடமிருந்து ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பலியான மீனவர் குடும்பத்துக்கு இலங்கையிடமிருந்து ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Updated on
2 min read

பலியான தமிழக மீனவரின் குடும்பத்திற்கு இலங்கையிடம் இருந்து 20 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக பெற்றுத்தர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீனவர்கள் நேற்று(திங்கட்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய எல்லைப் பகுதியான ஆதம்பாலம் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய போது ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்து, பலியானார்.

இது மிகவும் வேதனைக்குரியது, வருத்தத்துக்குரியது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை செய்த இலங்கை கடற்படையை தமாகா கடுமையாக கண்டிக்கிறது. மேலும் சில மீனவர்கள் படுகாயமடைந்த நிலையில் கரை திரும்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் இந்த மனிதாபிமானமற்ற செயல் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதற்காக கடலை நோக்கியும், வானத்தை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், சிறைப்பிடித்துச் செல்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தவறிய அரசாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. ஏற்கனவே இலங்கை கடற்படையால் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

கடந்த 2011-ம் ஆண்டு இலங்கை கடற்படை சுட்டதால் தமிழக மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் தமிழக மீனவர்களைக் குறிபார்த்து இலங்கை கடற்படை சுட்டிருப்பது கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான்.

இதனை இலங்கை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனைக் கண்டிப்போடு கேட்க வேண்டிய மத்திய பாஜக அரசு, மீனவர்கள் பிரச்சனையில் மெத்தனப்போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

எனவே இனியும் மத்திய பாஜக அரசு மவுனம் சாதிக்காமல் தமிழக அரசின் சார்பிலும், மத்திய அரசின் சார்பிலும் பிரதிநிதிகளை, உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரியுடன் சேர்ந்து இலங்கைப் பிரதமரைச் சந்தித்து இந்த கொலைச் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை நேரில் தெரிவிக்க வேண்டும். மேலும் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையின் மீது சட்டத்தின் அடிப்படையில் கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்த வேண்டும். பலியான தமிழக மீனவரின் குடும்பத்திற்கு இலங்கையிடம் இருந்து 20 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக பெற்றுத்தர வேண்டும்.

மேலும் மத்திய, மாநில அரசுகளும் உரிய நிவாரணத்தை பலியான மீனவரின் குடும்பத்திற்கும், காயமடைந்த மீனவர்களுக்கும் வழங்க வேண்டும். இனிமேலாவது மத்திய, மாநில அரசுகள் ஆக்கபூர்வமான, அதிகாரபூர்மவான நடவடிக்கைகளை விரைந்து எடுத்து தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கும், அவர்களது உயிருக்கும் உரிய பாதுகாப்பு கொடுத்து மீனவர்களையும், அவர்களது குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in