

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு மாநில அரசு கேட்ட ரூ.40 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கக்கூட தயாராக இல்லை. எனவே, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மார்ச் 31-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.