Published : 27 Jun 2016 08:42 AM
Last Updated : 27 Jun 2016 08:42 AM

பெண் தொழிலதிபரை கடத்திய கார் ஓட்டுநர் கைது

திருச்செங்கோடு பெண் தொழிலதி பர் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அவரது கார் ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டார்.

திருச்செங்கோடு மலைக்காவலர் கோயில் பின்புறத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஷர்மிளா பானு (40). கணவரை இழந்த ஷர்மிளா பானு, திருச்செங்கோடு பட்டறை மேட்டில் ரிக் வண்டிக்கு தேவையான உதிரி பாகம் தயாரிக்கும் ஆலையை நடத்தி வந்தார்.

கடந்த 23-ம் தேதி மாலை வீட்டில் இருந்து நிறுவனத்துக்கு காரில் புறப்பட்ட ஷர்மிளா பானுவை அவரது கார் ஓட்டுநர் அக்பர் அலி கடத்திச் சென்றார். அன்று இரவு 11 மணியளவில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிறுத்தம் அருகே காரில் மயக்க நிலையில் இருந்த ஷர்மிளா பானு மீட்கப்பட்டார்.

கடத்தல் சம்பவம் தொடர்பாக ஷர்மிளா பானு திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். ரூ.20 கோடி கேட்டு கடத்தி யதாகவும், பணம் தருவதற்கு ஒரு நாள் கால அவகாசம் கேட்டதால், 15 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு விடுவித்ததாகவும் கூறினார்.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. சசிமோகன் உத்தரவின்படி, திருச் செங்கோடு காவல் துணைக் காணிப் பாளர் பி.சுரேஷ் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படையினர் நடத்திய தீவிர விசார ணையில், கார் ஓட்டுநர் அக்பர் அலியின் உறவினர்களான சேலம் சின்ன அம்மாபாளையத்தைச் சேர்ந்த பாசில் (22), அவரது மனைவி செவிலியர் யாஸ்மின் (22), இவரது தம்பி லியாகத் அலி ஆகியோரைக் கைது செய்தனர்.

கடத்தலில் மூளையாக செயல் பட்ட கார் ஓட்டுநர் அக்பர் அலியை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் அக்பர் அலி நின்றுகொண்டு இருப்பதாக, தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதையடுத்து விரைந்து சென்ற தனிப்படையினர், அங்கிருந்த அக்பர் அலியை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியது:

கணவரை இழந்து தனியாக உள்ள ஷர்மிளா பானுவை மிரட்டி பணம் பறிக்க அக்பர் அலி திட்ட மிட்டுள்ளார். அதற்கு உறவினர் களான யாஸ்மின், பாசில், லியாகத் லி ஆகிய 3 பேரையும் கூட்டு சேர்த்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றவுடன் காரை பஞ்சர் என கூறி காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த அக்பர் அலியின் உறவினர்கள் காரில் ஏறியுள்ளனர்.

செவிலியராக உள்ள யாஸ்மின், ஷர்மிளா பானுவுக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். பின்னர் சேலத்துக்கு கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். யாஸ்மின் உள்ளிட்டவர்கள் கைதான நிலையில், அக்பர் அலி மனைவி, குழந்தைகளுடன் வெளியூர் தப்பிச் செல்ல திட்டமிட்டபோது போலீஸாரிடம் சிக்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x