Published : 12 Oct 2013 11:30 AM
Last Updated : 12 Oct 2013 11:30 AM

சென்னை காவல் ஆணையர் புதிய அலுவலகம் - முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை வேப்பேரியில் ரூ.25.46 கோடியில் கட்டப்பட்டுள்ள காவல் ஆணையர் புதிய அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இதன்மூலம், எழும்பூர் பாந்தியன் சாலையில் 170 ஆண்டுகளாக இயங்கி வந்த ஆணையர் அலுவலகத்துக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் 5.49 ஏக்கர் நிலத்தில் 1.73 லட்சம் சதுர அடி பரப்பளவில் அடித்தளத்துடன் கூடிய 10 தளங்களாகக் கட்டப்பட்டுள்ளது. ரூ.25 கோடியே 46 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

8-வது மாடியில் ஆணையர்

புதிய ஆணையரக கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். அதற்கான கல்வெட்டையும் அவர் திறந்தார். புதிய கட்டிடத்தில் 8-வது மாடியில் அமைந்துள்ள ஆணையர் அறையை பார்வையிட்டார். அப்போது, சென்னை காவல் ஆணையரக புதிய கட்டிடத்தின் அமைப்பு மற்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து விளக்கும் வீடியோ படக் காட்சியையும் பார்த்தார். இந்த நிகழ்வின்போது, காவல் துறை உயர் அதிகாரிகள் முதல்வர் ஜெயலலிதாவுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

எந்த தளத்தில் எந்த அலுவலகம்?

புதிய ஆணையரக கட்டிடத்தின் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் பண்டக சாலை, தரைத் தளத்தில் ஊடக சந்திப்பு அறை, மக்கள் தொடர்பு அலுவலர் அறை, சிற்றுண்டி சாலை, மக்கள் குறை தீர்வு கூடம் மற்றும் நுண்ணறிவு பிரிவு, முதல் தளத்தில் மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் மற்றும் பிரிவு அலுவலகங்கள், இரண்டாம் தளத்தில் கலந்தாய்வு கூடம், மாநகர காவல் அலுவலக சம்பள மற்றும் கணினி அறை, மூன்றாவது தளத்தில் மாநகரக் காவல் அலுவலக கூடுதல் ஆணையர் (மத்திய குற்றப்பிரிவு), மத்திய குற்ற அலுவலகப் பிரிவுகள், நான்காவது தளத்தில் மாநகரக் காவல் அலுவலகம், ஐந்தாம் தளத்தில் இணை மற்றும் துணை ஆணையாளர்கள் அலுவலகங்கள், ஆறாம் தளத்தில் நுண்ணறிவு பிரிவு அலுவலகம், நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் அறை, ஏழாவது தளத்தில் மண்டல சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகள், எட்டாவது தளத்தில் காவல் ஆணையாளர் அறை, சிறிய கலந்தாய்வுக் கூடம், நூலகம் மற்றும் கூடுதல் ஆணையாளர் அறைகள், ஒன்பதாவது தளத்தில் இரண்டு ஓய்வறைகள் உள்ளன.

தீ தடுப்பு சாதனங்கள்

கூடுதல் வசதிகளாக, 160 கே.வி.ஏ. திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர், 13 பேர் செல்லத்தக்க அளவில் 3 மின் தூக்கிகள், அவசர வழி படிக்கட்டுக்கள், இடிதாங்கி, வானூர்தி எச்சரிக்கை விளக்கு, தீ தடுப்பு சாதனங்கள், தீ எச்சரிக்கை ஒலிப்பான், இன்டர்காம் வசதி, விளக்குகளுடன் கூடிய உள்ளமைப்பு சாலைகள், புல் தரைகள், குடிநீர் வசதி, கழிவு நீர் வாய்க்கால் வசதி, ஊடக அறை, பொது மக்கள் காத்திருப்பு அறை, சோதனை அறை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை சமன் செய்யும் வகையில் மழைநீர் சேகரிப்பு வசதியும், மாற்றுத் திறனாளிகள் வந்துசெல்ல தடையற்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் சாய்வு தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல் துறை தலைமை இயக்குநர் ராமானுஜம், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுப் ஜெய்ஸ்வால், சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜ், மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x