

சென்னையில் பல பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. போதியளவு குடிநீர் கிடைப்பதில்லை என்றும், கிடைக்கும் தண்ணீரும் சுத்தமாக இல்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
குடிநீர் தினசரி சப்ளை இல்லை சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. அதனால், சென்னைக் குடிநீர் வாரியம் குடிநீரை ஒருநாள்விட்டு ஒருநாள்தான் சப்ளை செய்கிறது. ஒருநாள்விட்டு ஒருநாள் வருகிற குடிநீர் கூட 3 மணி நேரமே வருவதால் குடிநீர் பற்றாக்குறையாக இருக்கிறது.
வேறுவழியில்லாமல் தனியாரிடம் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம் ஏற்பட்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசி கலைவாணி கூறுகையில், குடிநீர் கலங்கலாக இருக்கிறது. சிவப்பு புழுக்கள் நெளிகின்றன. வடிகட்டி பயன்படுத்தினாலும் நன்றாக இல்லை. மழைக்காலத்தில் குடிநீரில் கழிவுநீர் நாற்றம் அடிக்கிறது. அதனால்தான் கடந்த 7 மாதங்களாக பணம் கொடுத்து வாட்டர் கேன் வாங்குகிறோம் என்றார்.
சென்னையில் பெரும்பாலானவர்கள் இதைத்தான் செய்கிறார்கள். குடம் 5 ரூபாய் சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான தனியார் லாரிகள் குடிநீர் விற்பனையில் ஈடுபட்டுள்ளன.குறிப்பாக ,சென்னையின் வடசென்னை பகுதியில் நிலைமை அதிக மோசமாக இருக்கிறது. வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், முத்தமிழ் நகர், கண்ணதாசன் நகர், சர்மா நகர் போன்ற பல்வேறு இடங்களில் மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்குகிறார்கள். திருவேற்காடு, செங்குன்றம் ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் தண்ணீர் பிடித்து வந்து விற்பனை செய்கின்றனர்.
சிலர் லாரித் தண்ணீரை வாங்கி, வீட்டுத் தரைமட்டத் தொட்டியில் (சம்ப்) நிரப்பிக்கொள்கின்றனர், அதில் இருந்து ஓஸ் பைப் மூலம் குடம் தண்ணீர் 5 ரூபாய்க்கு விற்கின்றனர். இப்படி நீண்டகாலமாகத் தண்ணீர் விற்பனை செய்து வரும் மகாகவி பாரதி நகர், 13-வது மத்தியக் குறுக்குத் தெருவைச் சேர்ந்த திருப்பதி ரெட்டி கூறுகையில், 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு லாரி தண்ணீரை ரூ.2,200 கொடுத்து வாங்கி, வீட்டுத் தரைமட்டத் தொட்டியில் சேமித்து வைத்து விற்கிறேன். ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய். தண்ணீ்ர் சுத்தமாகவும், சுவையாகவும் இருப்பதால் தினமும் 100 குடம் முதல் 200 குடம் வரை விற்பனையாகிறது. மூன்று சக்கரச் சைக்கிளில் வாங்க வருபவர்களுக்கு ஒரு குடம் 4 ரூபாய்க்கு விற்பேன். அவர்கள் சில தெருக்கள் கடந்து சென்று குடம் தண்ணீர் 6 ரூபாய் வரை விற்கிறார்கள் என்றார்.
குடிநீர் தட்டுப்பாடு அபாயம் இதுகுறித்து 'தேவை' என்ற பெயரில் செயல்படும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில் "சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் இருப்பதால் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி. தற்போது இந்த ஏரிகளின் மொத்த நீர்இருப்பு 2,732 மில்லியன் கனஅடிதான். கடந்த ஆண்டு இதேநாளில் 4,632 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.
பருவமழை கைகொடுக்குமா?
சென்னைக் குடிநீர் வாரியம், இந்த ஆண்டு பருவமழையைப் பெரிதும் நம்பியிருக்கிறது. கிருஷ்ணா நதிநீர்கூட எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. சனிக்கிழமை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 126 கனஅடி தண்ணீர்தான் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு வடகிழக்கு பருவமழை எந்தஅளவுக்கு கைகொடுக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.