

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் 10 இடங்களில் பிரம்மாண்ட போர்வெல் அமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
தமிழக பட்ஜெட் 2017 - 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், "மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும்சூழ்நிலையில், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய கடும் சவால்களை அரசுசந்திக்க வேண்டியுள்ளது.
வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழைகளினால் கிடைக்க வேண்டிய மழைப் பொழிவில், மொத்தமாக62 சதவீதம் குறைந்துள்ளதால், நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது.
மேலும், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
இந்த வறட்சியான சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக, புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, ஏற்கெனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளைப் புதுப்பித்தல், விசை பம்புகளை மாற்றுதல் மற்றும் தேவையான பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் போன்ற பணிகளை கிராமப்புறங்களில் 460 கோடி ரூபாய் செலவிலும், நகர்ப்புரங்களில் 150 கோடி ரூபாய் செலவிலும் அரசு மேற்கொண்டு வருகிறது.
2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தேசிய ஊரகக் குடிநீர்த் திட்டத்திற்கு 300 கோடி ரூபாயும், குறைந்தபட்ச தேவைகள் திட்டத்திற்கு 186 கோடி ரூபாயும், நபார்டு வங்கி நிதியுதவி அளிக்கும் திட்டங்களுக்கு 600 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன" என்றார்.