

தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்தில் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 1,500 சேவல்கள் பங்கேற்றன. இன்றும் போட்டி நடைபெறுகிறது.
விளார் கிராமம் அய்யனார் கோயில் அருகில் தென்மண்டல வீர விளையாட்டு கலைச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் விழாவின்போது வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, வெற்றுக்கால் சேவல் சண்டை நேற்று காலை தொடங்கியது. இதில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சண்டை சேவல்கள் கொண்டுவரப்பட்டன.
தஞ்சாவூர் மண்டல கால்நடைதுறை இணை இயக்குநர் மாசிலாமணி தலைமையில், உதவி இயக்குநர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், துணை இயக்குநர் ராஜசேகரன் மேற்பார்வையில் 6 கால்நடை மருத்துவர்களும், 25 உதவியாளர்களும் சேவல்களை ஆய்வு செய்தனர். அப்போது, சேவல்களின் உடல் ஆரோக்கியம், மது கொடுக்கப்பட்டுள்ளதா, கால்களில் கூர்மையான நகம் உள்ளதா என ஆய்வு செய்து, அதன்பின் அந்த சேவல்களை போட்டிக்கு அனுமதித்தனர். தொடர்ந்து போட்டிக்கான பந்தலில் சேவல்கள் ஆக்ரோஷமாக சண்டையிட்டன. சேவல் சண்டை போட்டியை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பார்வையிட்டார்.
இதுகுறித்து போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர் புதுக் கோட்டை சேகர் கூறியதாவது: இந்தப் போட்டியில் 1,500 சேவல்கள் பங்கேற்றுள்ளன. சண்டை சேவலில் ககர், யாக்கூத், தும்மர், ஜாவா, சீத்தா, பொட்டமாரி என 15 வகைகள் உள்ளன. இதில் பெரிய சேவல், சின்ன சேவல் என பிரித்து போட்டிக்கு அனுமதிக்கிறோம். 30 களங்களில் நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு சேவலுக்கும் ஒரு மணி நேரம் வழங்கப்படும். மூக்கை கீழே வைத்தாலோ, ஓட்டம்பிடித்தாலோ அந்த சேவல் தோல்வியை தழுவியதாக கருதப்படும். வெற்றி பெற்ற சேவல்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இன்றும் (பிப்.12) போட்டி நடைபெறுகிறது என்றார்.