Published : 12 Feb 2017 09:36 AM
Last Updated : 12 Feb 2017 09:36 AM

சமூக வலைதளங்களில் சசிகலாவுக்கு ஆதரவான பிரச்சாரத்துக்கு 760 குழுக்கள்: ஐடி பிரிவு செயலாளர் தகவல்

அதிமுக-வுக்கு வலு சேர்க்கும் வகையில் சசிகலாவுக்கு ஆதர வாக தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதற்காக 760 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட வி.வி.ஆர். ராஜ் சத்யன் தெரிவித்தார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக இருந்த சிங்கை ஜி.ராமச்சந்திரன் ஓ.பி.எஸ். ஆதரவாளர் என்று புகார் எழுந்தது. இதையடுத்து, அவரை நீக்கிய சசிகலா, அவருக்கு பதிலாக அப்பிரிவின் இணைச் செயலாளர் ராஜ் சத்யனை செயலாளராக அறிவித்தார். ராமச்சந்திரனும் அவருக்கு முன்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ’ஆஸ்பயர்’ சாமிநாதனும் தற்போது ஓ.பி.எஸ். தரப்புக்கான தகவல் தொழில் நுட்ப பிரச்சாரங்களைச் செய்துவருகிறார்கள்.

இந்த நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ’தி இந்து’விடம் பேசினார் ராஜ் சத்யன். அவர் கூறியதில் இருந்து…

‘‘ஓ.பி.எஸ்-ஸுக்காக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தக வல்களை பரப்புபவர்கள் பொய்யான தவல்களை பரப்பி ஸ்டண்ட் அடிக்கிறார்கள். ஏற்கெனவே, அம்மா (ஜெய லலிதா) இருந்தபோது தக வல் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் சேர்க்கைக்காக ஒரு ‘டிரைவ்’ உருவாக்கப்பட்டது. இப்போது அதேபோன்றதொரு ‘டிரைவ்’ ஏற்படுத்தி இருக்கும் ராமச்சந்திரன், அதை வைத்து, தினமும் ஓ.பி.எஸ்-ஸை பார்க்க எத்தனை பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை ’டேட்டா பேஸாக’ உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இதேபோல், ‘ஆஸ்பயர்’ சாமிநாதன் ஒரு அலைபேசி எண்ணைக் கொடுத்து, ஓ.பி.எஸ்-ஸை ஆதரிக்கும் விதமாக அந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். இதுவரை ஒன்றரை லட்சம் அழைப்புகள் வந்திருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

எங்களைப் பொறுத்தவரை, யாரையும் புண்படுத்தாத வகை யில் சசிகலாவுக்கு ஆதரவான தகவல்களையும் எதிர்த்தரப்பை நாகரிகமாக கேலி செய்யும் ’மீம்ஸ்’களையும் வெளியிட்டு வருகிறோம். பொதுச் செய லாளர் என்ன செய்தியை வெளியிடுகிறாரோ அதை அப் படியே சமூக வலைதளத்துக்கு தருவது தான் எங்களது வேலை. இடையிடையே, எதிரணி யினரின் பொய் பிரச்சாரத்துக்கும் நாகரீகமான முறையில் பதிலளிக் கிறோம்.

அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவில் தகவல்களை பரப்புவதற்காக 50 மாவட்டச் செயலாளர்களை உள்ளடக் கிய 700 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ‘சின்னம்மா ஃபார் சி.எம்.’ என்ற தலைப்பில் ’வாட்ஸ் அப்’ உள்ளிட்ட 760 குழுக்கள் இருக்கின்றன. இந்தக் குழுக்களுக்கு தினமும் 200 தகவல்களை அனுப்புகிறோம். அந்தக் குழுக்கள் மூலமாக தமிழகம் முழுவதும் பொது மக்களுக்கும் தகவல்கள் பரப் பப்படுகின்றன. இதற்காக தக வல் தொழில் நுட்பப் பிரிவில் 25 பேர் பணியில் இருக்கிறார்கள். இப்போதிருக்கிற ‘நெட்வொர்க்’கின்படி ஒரு தகவலை ஒரே சமயத்தில் 5 லட்சம் பேரிடம் எங்களால் கொண்டு போய் சேர்க்கமுடியும்’’ என்றார் ராஜ் சத்யன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x