

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பால்வளத்துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா. இவரது மகன் ரவி(45) பெருமாள் பட்டில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெருமாள்பட்டு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ரவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. தகவலறிந்து சென்ற செவ்வாப் பேட்டை போலீஸார் சடலத்தை கைப்பற்றி
மருத்துவ மனைக்கு அனுப் பினர். பட்டப்பகலில் அமைச்சரின் தம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
இதில் திடீர் திருப்பமாக செவ்வாப் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், நெமிலிச்சேரியைச் சேர்ந்த திருநாவுக்கரசு ஆகியோரை நேற்று முன்தினம் இரவு விசாரணைக்காக செவ்வாப்பேட்டை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து இன்று கைது செய்யலாம் என தெரிகிறது.
பெருமாள்பட்டு அருகே பொஜி கண்டிகை பகுதியில் ரவிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் தொடர் பான பிரச்சினையால் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட தாக தகவல் பரவியது. இதுகுறித்து காவல்நிலைய ஆய்வாளரிடம் கேட்டபோது, மேற்கண்ட இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். கொலை வழக்கில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரே விசாரணை வளையத்துக்குள் சிக்கியிருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது