‘பாலாறு புல்லூர் தடுப்பணைக்கு சளைத்ததல்ல தேக்குவட்டை அணை’ - அட்டப்பாடியில் தமிழ் தேச பேரியக்கத்தினர் திடீர் ஆய்வு

‘பாலாறு புல்லூர் தடுப்பணைக்கு சளைத்ததல்ல தேக்குவட்டை அணை’ - அட்டப்பாடியில் தமிழ் தேச பேரியக்கத்தினர் திடீர் ஆய்வு
Updated on
3 min read

ஆந்திர அரசு பாலாற்றில் கட்டியுள்ள புல்லூர் தடுப்பணை எந்த அளவு தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாதது அட்டப்பாடியில் கட்டப்பட்டு வரும் 6 அணைகள். இந்த அணைகளைக் கட்டும் பணியை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், பவானியில் கோடைகாலத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு கிடைக்காது என்று எசச்சரித்துள்ளனர் தமிழ் தேச பேரியக்கக் குழுவினர்.

கோவைக்கு மேற்கே ஆனைகட்டிக்கு அப்பால் உள்ள கேரளாவின் அட்டப்பாடி பிரதேசத்தில் தேக்குவட்டை என்ற இடத்தில் பவானிக்கு குறுக்கே 100 மீட்டர் நீளம், 5 மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டியுள்ளது கேரள அரசு. இதேபோல, மேலும் 5 அணைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’வில் தொடர்ந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இதைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின. தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த நிலையில், தமிழக அரசியலில் அசாதாரண சூழல் ஏற்பட்டதால், அதைப் பயன்படுத்திக்கொண்ட கேரள அதிகாரிகள், அணை கட்டும் பணிகளை வேகப்படுத்தினர்.

இந்த நிலையில், தமிழ் தேசப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், அருணா பாரதி, இராசேந்திரன், மனித உரிமை ஆர்வலர் கல்பாக்கம் நடராஜன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் அட்டப்பாடிக்கு நேற்று சென்று, தேக்குவட்டை அணைப் பகுதியைப் பார்வையிட்டனர்.

தற்போது தேக்குவட்டை அணைப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. தற்போதே இந்த அணையில் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்ணீர் தேங்கிநிற்கிறது. திட்டமிட்டபடி மேலும் 5 அணைகளைக் கட்டி முடித்தால், தமிழகப் பகுதிக்கு கோடைகாலத்தில் பவானி மூலம் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பெ.மணியரசன் கூறியதாவது: வாணியம்பாடி அடுத்து பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு இதேபோன்ற சிறிய தடுப்பணையைத்தான் ஆரம்பகாலத்தில் கட்டியிருந்தது. அதையே பின்னர் 25 அடி உயரத்திலும், 12 அடி அகலத்திலும் உயர்த்திக் கட்டினர். அதனால்தான் பாலாற்றில் முற்றிலும் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. அதை நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே தமிழகத்தினருக்கு இதுகுறித்த தகவல் தெரிந்தது.

ஆந்திர மாநிலத்தில் மழைக்காலங்களில் புல்லூர் தடுப்பணையில் தண்ணீர் தேங்கியபோதும், தமிழக மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை கண்டுபிடிக்கப்பட்டது. அதேதான் அட்டப்பாடி அணையின் நிலையும். இங்கு தேக்குவட்டை கிராமத்தில் தற்போது அணை கட்டும் பகுதியை பொரிக்காரி மடுவு என்று இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

அவசியம் என்ன?

இங்கே ஆறு செல்லும் இடத்தில் இருபுறமும் 200 அடி உயரத்தில் மலைகள், காடுகள் உள்ளன. ஏற்கெனவே இந்தப் பகுதியில் பெரும்பள்ளம் உள்ளது. அதில் நீர் தேங்கி, மோட்டார் பம்ப்செட் வைத்து விவசாயிகள் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். அதற்கு கேரள அரசே மின் இணைப்புகளையும் கொடுத்துள்ளது. அணை கட்டிய இடத்தில் 100 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்குவதாகவும், இந்த இடத்தில் இயற்கையாகவே இப்படி ஒரு பள்ளம் இருப்பதால், எப்போதும் தண்ணீர் வற்றியதே இல்லை என்றும் இப்பகுதி மக்கள் குறிப்பிடுகிறார்கள். குடிநீரைக் கூட இந்தப் பள்ளத்திலிருந்தே எடுத்துக் கொள்ளலாம். அப்படியிருக்கும்போது தற்போது இங்கு அணை கட்ட வேண்டியதன் அவசியம் என்ன?

ஆற்றுப் பகுதியில் மரபு வழியாக பாசனம் நடந்து வந்திருந்தால், அங்கு தண்ணீருக்கு உரிமை கோருவதில் நியாயம் உண்டு. ஆனால், இங்கு 200 அடி உயரத்தில் உள்ள மலைகளைத் தாண்டி, சமதளப் பகுதியில் மரபு வழி விவசாயம் நடந்திருக்க சாத்தியமில்லை. அப்படி நடக்கவும் இல்லை. மோட்டார் பம்ப்செட்டுகள் வந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளுக்குள் மட்டும்தான் இந்த ஆற்றிலிருந்து நீர் எடுக்கும் நிலை உள்ளது. அந்த நீரும் பாசனத்துக்குப் போதவில்லை என்று விவசாயிகள் கோரவில்லை. அப்படியிருந்தும் இங்கு 6 அணைகளைக் கட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்த தண்ணீரை சக்திவாயந்த மின் மோட்டார்களைப் பயன்படுத்தி எடுத்து, குழாய்கள் மூலம் பல கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டிருக்கலாம். எதிர்காலத்தில் இந்த நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கத் திட்டமிட்டிருக்கலாம்.

ஏற்கெனவே கேரள மாநிலம் பிளாச்சிமடையில் கோலா தொழிற்சாலை அமைக்க அனுமதி கொடுத்து, அந்த நிறுவனம் அதிக அளவு நீர் உறிஞ்சியதால் அந்தப் பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டது. மக்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக நீண்டகாலப் போராட்டம் நடத்தி, அதை மூட வைத்தார்கள். அங்கு கேரள மக்களுக்கான பாசன நீர் பாதிக்கப்பட்டதால்தான் அந்த ப்போராட்டமும் நடந்தது. கேரள அரசு பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல், தொழிற்சாலையை மூடச் செய்தது.

ஆனால், அட்டப்பாடியில் அணைகளைக் கட்டி தண்ணீர் எடுப்பதன்மூலம் பெரிதும் பாதிக்கப்படுவது தமிழகம்தான். குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள்தான். இந்த நிலையில், அந்த தண்ணீரை கோலா நிறுவனம், மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு கொடுத்தால்கூட, தமிழக மக்களுக்காக அந்த நிறுவனங்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்குமா? மேலும், பல கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய்கள் மீது நீரை கொண்டுசெல்வது நதிநீர் ஆணையத் தீர்ப்புக்கு எதிரானது. இவ்வாறு தண்ணீரைக் கடத்துவது, தமிழகத்தின் மரபு வழி பாசன உரிமையை நசுக்குவதாகும்.

எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது கேரள அரசே முன்வந்து அணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும்.

வீட்டின் முன் போராட்டம்!

இந்த அணைகளால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு கோடி பேர் பாதிக்கப்படுவர். அவர்களில் கணிசமானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே கேரள மாநில முதல்வருக்கு சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து கடிதம் எழுத போகிறோம், அப்படியும் முடிவு எடுக்காவிட்டால் பல்வேறு நூதன போராட்டங்களை தீவிரப் படுத்தப்போகிறோம் என்றார்.

வழக்குத் தொடருவதே முடிவு…

இதுகுறித்து பொதுப்பணித் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “கேரளத்தில் நடக்கும் அணை பணிகள் தொடர்பாக, அவ்வப்போது பொதுப்பணித் துறை ஊழியர்கள் அட்டப்பாடிக்குச் ரகசியமாகச் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதுகுறித்து அரசுக்கும் தொடர்ந்து அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சினையில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அரசு வழக்குத் தொடர்ந்து, பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமே தவிர, அதிகாரிகள் ஒன்றும் செய்ய இயலாது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in