

விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், ‘இந்த சம்மன் ஒன்றும் வானத்தில் இருந்து நேரடியாக வரவில்லை’ என கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டர் எஸ்.கீதாலட்சுமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த ஏப்ரல் 7-ம் தேதி காலை 6.30 மணியில் இருந்து கடந்த ஏப்ரல் 8-ம் தேதி காலை 6.30 மணி வரை வருமான வரித்துறையினர் எனது வீடு மற்றும் மருத்துவ பல்கலைக்கழக அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம், நகைகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், வருமான வரித்துறைச் சட்டம் பிரிவு 131 ன் படி வருமான வரித்துறை துணை இயக்குநர் எனக்கு ஏப்ரல் 7-ம் தேதி ஒரு சம்மன் அனுப்பி வைத்துள்ளார். அதில், ஏப்ரல் 10-ம் தேதி காலை 11.30 மணிக்கு என்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது. நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஏப்ரல் 12-ம் தேதி ஆஜராகக் கூறியுள்ளனர்.
அந்த சம்மனை அவர்கள் எனக்கு சட்டப்படி அனுப்பி வைக்க எந்த அதிகாரமும் கிடையாது. இது சட்டப்படி செல்லாது. மேலும் அந்த சம்மனில் சோதனை குறித்தோ எதற்காக ஆஜராக வேண்டும் என்பது குறித்தோ எந்த விவரமும் இல்லை.
எனவே வருமான வரித்துறையினர் எனக்கு அனுப்பி வைத்துள்ள சம்மனை ரத்து செய்ய வேண்டும். அத்துடன், இது தொடர்பான ஆவணங்களை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யவும் வருமான வரித்துறையினருக்கு உத்தரவிட வேண் டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை வருமான வரி்த்துறையினரின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘மனுதாரர் சமுதாயத்தில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளார். வரு மான வரித்துறை சம்மன் அனுப்பினால் அதை மனுதாரர் மதித்து நடக்க வேண்டுமே தவிர, விசாரணையில் இருந்து தப்பிக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. வருமான வரித்துறையின் சம்மன் ஒன்றும் வானத்தில் இருந்து நேரடியாக வரவில்லை. மனுதாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதனடிப்படையில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே நேரில் ஆஜராக விலக்கு அளிக்கவோ அந்த சம்மனுக்கு தடை விதிக்கவோ முடியாது” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘‘வரும் ஏப்ரல் 17-ம் தேதி மனுதாரர் நேரில் விசாரணைக்கு ஆஜராவார். அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார். ஆனால் இதையேற்க மறுத்த நீதிபதி, ‘‘இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்யப்போகிறேன்’’ என்றார்.
இதையடுத்து, இந்த மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.