ஜெ., சசி சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

ஜெ., சசி சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
Updated on
2 min read

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்க‌ப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பொறுப்பேற்க உள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1991- 96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா, மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ.66.6 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த க‌ர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த 2015-ம் ஆண்டு மே 11-ம் தேதி நால்வரையும் விடுவித்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தனது இறுதி வாதத்தின்போது, “18 ஆண்டுகளாக நீண்டசொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக் குவித்தது, கூட்டுசதியில் ஈடுபட்டது, பினாமி பெயரில் சொத்துகளை சேர்த்தது, அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனவே அடிப்படை தவறுகளும், சட்ட முரண்களும் நிறைந்த நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்துவிட்டு, நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பின்படி நால்வருக்கும் விதிக் கப்பட்ட தண்டனையை உறுதி செய்ய வேண்டும்” என விரிவாக எடுத்துரைத்தார். 6 மாதங்களுக்கு மேலாக இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் அடங்கிய அமர்வு கடந்த ஜூன் 7-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

நினைவூட்டிய தவே

சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கின் விசாரணை முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் தீர்ப்பு வெளியாகவில்லை. இந் நிலையில் கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ்டாடில், துஷ்யந்த் தவே ஆகியோர் நேற்று காலை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பினாகி சந்திரகோஷ் அடங்கிய அமர்வு முன் ஆஜராயினர். அப்போது மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 3 மாதங்களுக் கும் மேலாகி விட்டது. இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன், இந்த அவசர நினைவூட்டலை உங்கள் (நீதிபதிகள்) முன் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. சட்டத்தைக் காப்பாற்றும் வழக்கறிஞர் என்ற முறையில் தீர்ப்பு குறித்து நினைவூட்ட விரும்புகிறேன்” என்றார்.

இதற்கு நீதிபதி பினாகி சந்திரகோஷ், “சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வ‌ழக்கில், தீர்ப்பு எழுதும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. முழுமையாக நிறைவு செய்யும் வரை காத்தி ருங்கள். இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பை வெளியிடுகிறோம்” என்றார்.

தமிழக அரசியலில் பரபரப்பு

ஓரிரு தினங்களில் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் சொத்துக் குவிப்பு வழக்கு பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியதைப் போல, சசிகலாவின் அரசியல் வாழ்க்கை யிலும் இவ்வழக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கை விரிவாக விசாரித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்வார்களா? அல்லது நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை முன்மொழிவார்களா? என்ற கேள்வி நீதித்துறை யிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.

நீதிபதியின் ஓய்வுக்கு முன்பாக தீர்ப்பு உறுதி!

நீதிபதி பினாகி சந்திரகோஷ், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி ஆச்சார்யாவுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கை விசாரித்த போது, “இன்னும் 4 வாரங்களில் தீர்ப்பு வெளியிடப்படும்” என தெரிவித்தார். ஆனால் அவ்வாறு தீர்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என அறிவித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட தேதியில் தீர்ப்பு வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனினும், நீதிபதி பினாகி சந்திரகோஷ் வரும் மே 27-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். வரும் ஏப்ரல் மாத இறுதியில் உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்க உள்ளது. எனவே அதற்கு முன்பாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதில் நீதிபதி பினாகி சந்திரகோஷ் உறுதியாக இருக்கிறார் என உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in