

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் 20-ம் தேதி முதல் நீர் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் நெற்களஞ்சிய மாக விளங்கும் காவிரி டெல்டா பகுதியில் நெல் சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது காவிரி நதிநீராகும்.
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகிய வற்றை மத்திய அரசு இதுவரை அமைக்கவில்லை. இதனால், காவிரி நீரில் தமிழகத்துக்கான பங்கைப் பெற உச்ச நீதிமன்றத்தை நாடும் நிலையே உள்ளது. இந்த அமைப்புகளை உடனே அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 2013-ல் தமிழக அரசு தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
நடுவர் மன்ற இறுதி உத்தரவின் படி, நடப்பு பாசன ஆண்டில் கர்நாடக அரசு நீரை விடுவிக்க வில்லை. எனவே, நீரை வழங்கு மாறு கர்நாடக அரசுக்கும், நீர் திறக்க அறிவுரை வழங்குமாறு மத்திய அரசுக்கும் தமிழக அரசு சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதன்பிறகும் கர்நாடக அரசு நீரை வழங்கவில்லை. எனவே, நடுவர் மன்ற இறுதி உத்தரவின்படி தமிழகத்துக்கான நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
நமக்கு தேவையான அளவு தண்ணீர் மேட்டூர் அணையில் கிடைக்காததால், டெல்டா விவசாயி கள் நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்ய ரூ.64.30 கோடியில் சிறப்பு தொகுப்பு திட் டத்தை சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அறிவித்தேன். அதன்படி செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தால் சம்பா சாகுபடியை முழுவீச்சில் மேற்கொள்ளும் நிலையில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
இதற்கிடையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிலிகுண்டுலு நீரளவு நிலையத்தில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் கிடைக்கும் வகையில் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. பிறகு, கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.
அதன்படி பிலிகுண்டுலு நீரளவு நிலையத்தில் கடந்த 14-ம் தேதி 8.92 டிஎம்சி நீர் கிடைக்கப்பெற்றுள்ளது. நடுவர் மன்ற இறுதி உத்தரவின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர் அளவை கணக்கிட்டு ஆணை பிறப்பிக்குமாறு காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16-ம் தேதி (நேற்று) நிலவரப்படி மேட்டூர் அணையில் 84.76 அடி நீர் உள்ளது. எனவே, சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, வரும் 20-ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன். உச்ச நீதி மன்ற உத்தரவுகளின்படி கர்நாடக நீர்த் தேக்கங்களில் இருந்து நீர் கிடைப்பதை எதிர்நோக்கியும், தமிழகத்துக்கு உரிய நீரை வழங்குமாறு காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு வழங்கும் என்பதன் அடிப்படையிலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.